இலங்கை-இந்திய நட்புறவின் பாலத்தை நீடித்த குஷிநகர் !! (கட்டுரை)
கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் படுத்த கோணத்தில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்தான் குஷிநகர். இந்நகர், இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ளது. அந்நகரத்தில் சர்வதேச விமான நிலையமொன்று கடந்த 20ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில், இவ்வாறு சர்வதேச விமான நிலையமொன்று திறந்து வைத்திப்பதன் ஊடாக, இந்திய அரசாங்கத்தின் பல்கோண சிந்தனைகள் புலனாகிறது. சுற்றுலாப்பயணிகளை வகைப்படுத்தலாம். அதில், வழிபாட்டுத் தளங்களுக்கு மட்டுமே சுற்றுலா பயணங்களை மேற்கொள்வோரை கண்டிருக்கின்றோம்.
பொதுவாக, ஓடோடி உழைத்து, உழைத்து தங்களின் இறுதிக்காலக்கட்டத்தில் ஏதாவது அனுபவித்து விடவேண்டுமென நினைத்து, சுற்றுலாத்தளங்களுக்கு செல்லுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வாறானவர்கள் வழிபாட்டு தளங்களுக்கு சுற்றுலாச் சென்று, மனங்களுக்கு ஆறுதலைப் பெற்றுக்கொள்கின்றனர்.
கொரோனாவுக்கு பின்னர், பெரும்பாலான சுற்றுலா பயணங்கள் வழிபாட்டு தளங்களை மையமாகக் கொண்டிருக்கும். அதிலும், புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நகரத்தில் விமான நிலையமொன்று இருக்கையில், அங்குச் நேரடியாக செல்லவிரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கும்.
பௌத்த மதத்தை தழுவுகின்ற ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் குஷிநகரை நோக்கி படையெடுப்பர் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. இந்த தூரநோக்கான திட்டத்துக்காக இந்திய அரசாங்கத்தை புகழ்வதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கொரோனாவினால், சுற்றுலாப்பயணிகளின் வருகைகள் வீழ்ச்சியடைந்துவிட்டது என சதாகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்காமல். வழிபாட்டுத் தளங்களுக்குச் சுற்றுலாச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது.
மத வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வதற்கும் முதியோரை அனுப்பிவைப்பதற்கும் யாருக்குத்தான் ஆசையிருக்காது. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொடுப்பது மட்டுமன்றி, நேரடியாக விமானங்கள் தரையிறங்கினால், அதனூடான இதர வருமானங்கள் தொடர்பிலும் எழுந்த சிந்தனையை பாராட்டியாகவே வேண்டும்.
அவ்வாறான சிந்தனையினால் அமைக்கப்பட்ட குஷிநகர் சர்வதே விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 20ஆம் திகதியன்று திறந்துவைத்தார். அத்தரையில், இலங்கையில் இருந்து சென்றிருந்த விமானமே முதலாவதாக தரையிறங்கியது.
இதனூடாக, இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கான நட்பு பாலம் நீடிக்கப்பட்டுள்ளது. சுமார் 125 பௌத்த பிக்குகள் சகிதம் சென்ற அந்த விமானத்தில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க, தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோரும் பயணித்திருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டு விமான நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் நாமல் பேசுகையில் இலங்கைக்கு இந்தியா அளித்த பெரும் பரிசு புத்தமதம் என்றும் அது இலங்கைக்கு வந்ததிலிருந்து நம் இரு நாடுகளுக்கிடையேயான உறவு வளர்ந்து வருகிறது என்றும் கூறினார்.
விழாவைத் தொடர்ந்து, அவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை தொகுப்பை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார், அதில் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செய்தியும் இருந்தது. இரு நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய உறவை வலுப்படுத்த இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் மானியம் வழங்கியமைக்கு பிரதமர் மோடிக்கு பிரதமர் மஹிந்த நன்றி தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இருதரப்பு சந்திப்பின் பின்னர் 2020ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதியன்று குஷிநகர் விமான நிலையம் இந்திய அமைச்சரவையினால் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையிலிருந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் சென்ற இந்த தூதுக்குழுவில் சிரேஷ்ட பௌத்த பிக்குமார் 100 பேரும், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக்க, ஜீவன் தொண்டமான், சிசிர ஜயக்கொடி, விஜித பெருகொட ஆகிய நான்கு பேரும் மற்றும் சிரேஷ்ட அதிhரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவில் இடம்பெற்ற பௌத்த பிக்குமார் இலங்கையின் 22 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பல்வேறு சமயப் பிரிவுகள் மற்றும் பௌத்த ஆலயங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் மூத்த மற்றும் சிரேஷ்ட துறவி மதிப்புக்குரிய வேதாருவே உபாலி அனுநாயக்க தேரர் ஆவார்.
இநதப் பயணமானது சுப தினமான வப் போயா தினமன்று கொழும்பிலிருந்து புனித குஷிநகருக்கு மேற்கொள்ளப்பட்டது.
இநதப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதமர் மோடிக்கு பகவத்கீதை பிரதியைக் கையளித்தமை பார்க்கப்படுகிறது.
இந்திய பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பல சந்தர்ப்பங்களில் உறுப்பினர்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு பகவத் கீதையை மேற்கோள்காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு பகவத்கீதை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது.
இந்த யுகத்தின் ஆரம்பத்தில் அதாவது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகாபாரத யுத்தத்தின்போது குருக்ஷேத்ரத்தில் வைத்து பகவான் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு போதிக்கப்பட்டதே பகவத் கீதை. உண்மையில் பகவத்கீதை அர்ச்சுனன் மூலமாக உலகத்தினருக்குப் போதிக்கப்பட்டதாகும். தத்துவ, மத உரையாடல்களில் மிகச் சிறந்ததாகவும் திகழ்வது.
அத்தகைய சிறப்புக்குரிய பகவத்கீதையை அமைச்சர் நாமல் பிரதமர் மோடிக்கு வழங்கிய நிகழ்வு இந்திய மக்களுக்கே மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். கௌரவத்துக்குரியவர்களுக்கு வழங்கப்படும் பெரும் பரிசாகவும் பகவத்கீதை பார்க்கப்படுகிறது.
இதேவெளை பௌத்தம், ஒரு முக்கிய பாலமாகவும் அது இலங்கையையும், இந்தியாவையும் இணைப்பதாகவும் கருதப்படுகிறது. அத்துடன் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நாகரிக இணைப்பிலும் மையமாக உள்ளது.
இலங்கையில் புத்த மதம் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் இளவரசர் மகிந்தவின் வருகையுடன் தொடர்புடையது.
இவற்றை மனதில்கொண்டு கடந்த வருடம் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது இருதரப்பு பௌத்த உறவுகளை மேலும் கட்டி எழுப்பும்வகையில் இந்தியப் பிரதமர் மோடி 15 மில்லியன் அமெரிக்க டொலரை அறிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலமான குஷிநகர் அதன் வளமான பாரம்பரியம் காரணமாக புனித நகராக பிரகாசிக்கிறது. புத்த பகவான் தனது இறுதி மூச்சை எடுத்து இந்த புனித நகரத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தாராம்.
ஏனைய பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த சிராவஸ்தி, கபிலவஸ்து, மற்றும் லும்பினி ஆகிய தளங்களும் இதற்குத் தொலைவில் இல்லை. இத்தகைய சிறப்புக்கள் காரணமாக இந்த நகர் பல்வேறு நாட்டு மக்களையும் கவர்ந்துள்ளது.
கொவிட்-19 பிரச்சினைக்கு முன்னர் தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மியன்மார் மற்றும் பல நாடுகளிலிருந்தும் மக்கள் இந்த நகரிலுள்ள மஹாபரிநிர்வாண ஆலயத்துக்கு வருகை தந்து தினசரி வழிபாடுகளில் கலந்துகொண்டனர். எனவே குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் கோரிக்கை நீண்டகாலமாகவே உள்ளது. இலங்கையிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் குஷிநகருக்கு ஏராளமான பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.