மேல் மாகாணத்துக்கு இணையாக வட மாகாணத்தை முன்னேற்றுவோம் – வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா!!
யுத்த பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி யெழுப்புதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா. இலங்கையின் அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய ஜீவன் தியாகராஜா மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராகவும், மனிதநேய நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற பின் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் விரைவில் மேல் மாகாணத்துக்கு இணையாக வட மாகாணமும்எழுச்சி பெறும் என்றார். அவரது செவ்வி விரிவாக…
கேள்வி: புதிய வடமாகாண ஆளுநராக நீங்கள் பதவியேற்றிருக்கின்றீர்கள். அந்த மாகாணத்தின் முன்னேற்றத்திற்காக புதிதாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூறுவீர்களா?
பதில்: அரசியலுக்கு அப்பாற்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதே எனது எதிர்பார்ப்பு.
நிர்வாகம், அபிவிருத்தி, மக்கள் சேவை ஆகிய மூன்றையும் முறையாக முன்னெடுப்பதே எமது இலக்கு. மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் எமது பிரதிநிதிகளாவர். மக்கள் அவர்களிடம் சென்று தமது பிரச்சினைகளைத் தெரிவித்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். அங்கு தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரமுடியும். வடமாகாணத்தை பசுமை பிரதேசமாக மாற்றுவதற்கான திட்டமும் எம்மிடம் உண்டு. மேல் மாகாணத்துக்கு இணையாக வட மாகாணத்தை முன்னேற்றவும் நாம் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி: வடமாகாணம் பல்வேறு பாதிப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ள மாகாணமாகும். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மக்களின் வறுமை நிலையை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் என்ன?
பதில்: அவ்வாறு மேற்கொள்ளவேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன. குறிப்பாக சொந்த வீடுகளற்றவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பது அவசியம்.
சாதாரணமாக நான்கு சுவர்களை மட்டும் கொண்ட பெயரளவிலான வீடுகள் அன்றி தரமான சகல வசதிகளையும் கொண்ட வீடுகளை அவர்களுக்கு வழங்குவதுடன் அவர்கள் முகம்கொடுக்கும் ஏனைய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி: வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் கடந்த பல வருடங்களாக தொடர்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அது பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தலையிட்டும் அதனை முற்றாக தீர்க்க முடியாமல் உள்ளது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அது தொடர்பில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
பதில்: நாட்டில் ஒரே சட்டமே நடைமுறையிலுள்ளது. மாகாணத்திற்கு மாகாணம் அல்லது நகரத்துக்கு நகரம் அது வேறுபட முடியாது. எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அந்தவகையில் அவ்வாறானவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களானால் தொடர்ச்சியான சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
கேள்வி: நாட்டில் விவசாயிகளுக்கான உரம் தொடர்பில் பிரச்சினைகள் உருவெடுத்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் வடமாகாணத்தில் அவ்வாறான போராட்டங்களைக் காணமுடியவில்லை. அங்கு இரசாயன மற்ற பாரம்பரிய விவசாய முறை பின்பற்றப்படுவது தொடர்பில் தெளிவுபடுத்துவீர்களா?
பதில்: இது நாட்டுக்கு தற்போது முக்கியமான ஒரு விடயமாகும். எவ்வாறெனினும் வடக்கு விவசாயிகளுக்கென பாரம்பரிய விவசாய முறை ஒன்று உள்ளது. அந்த முறைமை மிக சாத்தியமானதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை காணமுடிகிறது. நாடளாவிய ரீதியில் இந்த முறைமையை முன்னெடுப்பதற்கு வடக்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
வெறுமனே வடக்கு விவசாயிகள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை மட்டும் பார்க்காமல் ஏனைய பகுதிகளிலும் அதற்கான முறைமை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது அவர்களுக்கு இரசாயன உரம் கிடைக்கவில்லை. எனினும் அவர்கள் இயற்கை பசளையை உபயோகித்து சாத்தியமான முறையில் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
கேள்வி: வடமாகாணத்தின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் உள்ளனவா? அவ்வாறான திட்டங்கள் பற்றிக் கூறுவீர்களா?
பதில்: கல்வி என்றதுமே பலரும் பாடசாலை ரீதியான செயற்பாடுகளை மட்டுமே கவனத்திற்கொள்வர். தொழிற்கல்வி தொடர்பில் செலுத்தப்படும் அவதானம் குறைவாகவே காணப்படுகிறது. வாழ்வாதாரத்திற்கு தேவையான கல்வியைப் பெற்றுக்கொள்வதில் தகவல் தொழில்நுட்பம், கைத்தொழில், தச்சு வேலைகள் போன்ற பல்வேறு பிரிவுகள் மூலம் தொழிற் கல்வியை பெற்றுக் கொள்வது அவசியமாக உள்ளது. அதற்கான முறையான வேலைத்திட்டங்களை மாகாண சபை மூலம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அதன் மூலம் கல்வியின் பெறுபேறுகளை அனைவருக்கும் சம அளவில் பெற்றுக்கொடுக்க முடியும்.
கேள்வி: வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள திட்டங்கள் தொடர்பில் கூறுவீர்களா?
பதில்: வடக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் மட்டுமன்றி முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளோம். உள்நாட்டு முதலீடுகள் மட்டுமன்றி வெளிநாட்டு முதலீடுகளையும் மேற்கொள்வது அவசியமாகும். அதன்மூலம் வேலைவாய்ப்புக்கள் உட்பட மக்கள் பயன்பெறக்கூடிய பெருமளவு நன்மைகள் கிடைக்கும். அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
கேள்வி: இந்திய மீனவர்களால் வடமாகாணத்தில் மீனவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அது தொடர்பில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவதுடன் இருதரப்பு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. எனினும் அதற்கு இதுவரை முழுமையான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. பூதாகரமாகியுள்ள இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் என்ன?
பதில்: இருதரப்பு மீனவர்களுக்கிடையிலும் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் எம்மால் செயற்பட முடியாது.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது அவசியமாகும். அதற்காக ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது. மீனவர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே எனது கருத்து. இது விடயத்தில் புத்திசாலித்தனமாகவும் இராஜதந்திர மட்டத்திலும் விடயங்களை முன்னெடுப்பது முக்கியமாகும்.
இருநாட்டு மீனவர் சங்கங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகளுக்கான வழிவகை மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நான் நினைக்கின்றேன்.
கேள்வி: வட மாகாணம் என்பது நாட்டின் நல்லிணக்கத்திற்கான முக்கிய மாகாணமாகும். 30 வருட யுத்தத்தின் பின்னர் அங்கு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்ன?
பதில்: அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கக்கூடிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களைப் பிரித்து பேதப்படுத்துவதை விட மக்களை ஒன்றிணைப்பதே முக்கியமாகும். அதனால் நல்லிணக்கத்திற்கான கட்டமைப்பை பலப்படுத்துவது முக்கியம். சிங்களம், தமிழ், முஸ்லிம் என சிந்திக்கும் வரை எம்மால் நாட்டை முன்னேற்ற முடியாது. அதனால் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தனை உருவாக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அதற்கு முன் மாதிரியான வேலைத்திட்டத்தை அறிமுகப் படுத்த முடியும். அது தொடர்பில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவது தொடர்பில் நாம் மகிழ்ச்சி கொள்ள முடியும்.
அதேவேளை மூன்று மொழிகளிலும் பயிற்சிகளை வழங்கி அலுவலகங்களில் அதனை நடைமுறைப்படுத்துவது சிறந்தது.
அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதன் மூலம் புதிதாக சிந்திக்கக்கூடிய பரம்பரை ஒன்றை எம்மால் உருவாக்க முடியும். கடந்த காலங்கள் தொடர்பில் சிந்தித்து பிற்போக்காக நாம் செயற்பட வேண்டிய அவசியமில்லை. எதிர் காலம் தொடர்பில் சிந்தித்து ஒற்றுமையாக செயற்படுவது மிகவும் முக்கியமாகும். அதன் மூலமே நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
கேள்வி: அரச சேவையை மாகாண மட்டத்திற்கு கொண்டு செல்லும்போது அந்த மாகாணத்திற்கு அவசியமான மற்றும் தேவையான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதில் நீங்கள் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள திட்டங்கள் பற்றி கூறுங்கள்?
பதில்: அரச சேவை எனும்போது எமக்கு பழமையான சிந்தனைகள்தான் வருகின்றன. அது அலுவலகங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்ற சிந்தனையே வருகின்றது. பெரும்பாலான நாடுகள் தனியார் துறை செயற்பாடுகளை போன்றே அரச துறை செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன. முன்பிருந்த அரச சேவை இந்த காலத்திற்கு பொருத்தமானதல்ல. நவீன காலத்துக்கு ஏற்ப அதனை செயற்படுத்துவது முக்கியம்.
மக்களுக்கு தேவையான சேவையை முறையாக பெற்றுக் கொடுக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் அரச அலுவலகங்களில் இடம்பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை வடமாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.மலேசியா போன்ற நாடுகளில் மிக சிறந்த முறையில் அரச சேவைகளை நடைமுறைப் படுத்துகின்றன.
தனியார் துறையில் ஊழியர்களை இனங்காணும் வகையில் அவர்களது பெயர்கள் அவர்களது உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அப்போது அவர்களை எளிதாக இனங்கண்டு கொள்ள முடிகிறது. அதேபோன்று அரச துறை ஊழியர்கள் மதிப்புடனும் கௌரவத்துடனும் செயற்பட வழிவகுப்பது அவசியம்.
அதேவேளை அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்களுக்கு சுயாதீனம் வழங்கப்படுவதும் முக்கியமாகும். குறிப்பாக அவர்கள் தமது கடமை நேரத்தில் பிள்ளைகளை பாடசாலையிலிருந்து கூட்டி வருவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும். அவர்கள் அந்த தடைப்பட்ட வேலையை வீட்டுக்கு செல்லும் முன்னர் முடித்துவிட்டு செல்ல சந்தர்ப்பம் வழங்கலாம். அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அதேவேளை அவர்கள் மக்கள் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் வழிவழிவகுக்கும்.
எனினும் தமக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கக் கூடாது.
கேள்வி: வடமாகாணத்தின் அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள தீர்மானித்துள்ள திட்டங்கள் தொடர்பில் கூறுவீர்களா?
பதில்: வட மாகாணத்தின் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பேச்சுவார்த்தையொன்று அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்படவுள்ளது.
அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் விசேட கொள்கைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளது. குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள் தொடக்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வரை அனைத்தும் உள்ளடங்கியதாக அந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
சகலருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் மலசலகூடங்கள் அமைக்கும் திட்டம், குப்பை கூளங்களை முகாமைத்துவ ப்படுத்தும் திட்டம், மரக்கறி பழ வகைகளை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் திட்டம்,
முதியோர்களை பராமரிப்பதற்கான விஷேட திட்டம், குறிப்பாக அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கான சுகாதார தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் 500க்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களில் 120 பேர் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு வழிவகை செய்யப்படும்.
சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது உணவகங்கள் அமைக்கப்பட்டு உணவு இல்லாதோருக்கு உணவு வழங்குவது தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்படும்.
கேள்வி: காணாமற்போனோர் தொடர்பான போராட்டங்கள் வடக்கில் முனைப்புப் பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா?
பதில்: உண்மையில் நான் ஒரு அரசியல்வாதி அல்ல. காணாமற் போனோர் பிரச்சினை தொடர்ந்து வருகின்றதை நானறிவேன் எனினும் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் எனது பங்களிப்புகளை வழங்கவும் தயாராக உள்ளேன்.
மாணவர்களுக்கான கல்வியில் முக்கிய கவனம் செலுத்தப் படுவதுடன் அவர்களுக்கான IT, ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான திட்டங்கள்,
அரச, தனியார் துறைகளில் பணிபுரிவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களது அத்தியாவசியத் தேவைகள் என்பன இனங்காணப்பட்டு அவற்றை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”