அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் அனுப்பிய ஆப்கானிஸ்தான் சிறுமி
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவில் கட்டுமானப் பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து கட்டுமானப் பொருட்கள், நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு சிறுமி, புனித நீரை அனுப்பியிருப்பதாக கூறினார்.
‘ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் காபூல் நதி நீரை அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமிக்கு வழங்குவதற்காக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, அந்த புனித நீரை ஸ்ரீராமருக்கு காணிக்கையாக வழங்குவதற்கு நான் அயோத்தி செல்கிறேன்’ என யோகி ஆதித்யநாத் கூறினார்.