நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு 25 லட்சம் பேர் அஞ்சலி: போலீஸ் மந்திரி தகவல்..!!
நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் அமைதியாக நடந்து முடிந்தது. இத்தகைய துக்கமான நேரத்தில் ரசிகர்கள், பொதுமக்கள் அமைதி மற்றும் பொறுமை கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தினர். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், பாதுகாப்பு பணியை சவாலாக ஏற்று போலீஸ், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ரசிகர்கள் 2 பகல், 2 இரவு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து 1,500 போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும், மத்திய போலீஸ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் தூக்கத்தை மறந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூருவில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. என்னை பலர் தொலைபேசியில் அழைத்து, நன்றி தெரிவித்தனர். ரசிகர்களும் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். புனித் ராஜ்குமார் குடும்பத்தினரும் அரசுக்கு ஒத்துழைத்தனர். அனைவரின் ஒத்துழைப்பால் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.