உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!!
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இருப்பினும், இதுதொடர்பான இறுதி முடிவை கட்சி எடுக்கும். ராஷ்டிரீய லோக்தளத்துடன் கூட்டணி இறுதியாகி விட்டது. தொகுதி பங்கீடு தான் இறுதி செய்யப்பட வேண்டும். ஒவைசி கட்சியுடனோ, திரிணாமுல் காங்கிரசுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை முதல்-மந்திரியாக இருந்தபோது, அகிலேஷ் யாதவ் சட்ட மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்தது குறிப்பிடத்தக்கது.