இந்திய கலாசார பெருமையை பார்த்து உலகமே வியக்கிறது- கேதர்நாத்தில் மோடி பேச்சு..!!
கேதர்நாத் சிவன் ஆலயத்தில் வழிபட்ட பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பாக மீண்டும் கட்டப்பட்ட சமாதியில் அமைந்திருந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. சில அனுபவங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டவை. பாபா கேதர்நாத்தின் அடைக்கலத்தில் எனது உணர்வு இப்படி தான் இருக்கிறது.
ஆன்மிகம், மதம் ஆகியவை ஒரே மாதிரியான கருத்துகளுடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இந்திய தத்துவம் மனித நலன் பற்றி பேசுகிறது. வாழ்க்கையை ஒரு முழுமையான பாதையில் பார்க்கிறது. இந்த உண்மையை சமுதாயத்துக்கு உணர்த்தும் பணியில் ஆதி சங்கராச்சாரியார் ஈடுபட்டார். சமுதாய நன்மைக்காக ஆதிசங்கரர் புதிய குறிக்கோள்களுடன் செயல்பட்டார்.
2013-ம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பிறகு பூஜ்ஜியத்துக்கு குறைவான வெப்ப நிலையில் கேதார் புரியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளுக்காக பாராட்டுகிறேன்.
இங்கு ஏற்பட்ட சேதம் நினைத்து பார்க்க முடியாதது. இதனால் கேதர்நாத் மீண்டும் எழுந்து நிற்குமா? என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கேதர்நாத் மீண்டும் அபிவிருத்தி செய்யப்படும் என்று எனக்குள் ஒரு குரல் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது. தற்போது கேதர்நாத் முன்பைவிட மகிமையுடன் நிற்கிறது.
நான் டெல்லியில் இருந்து கேதர்நாத்தின் மறுசீரமைப்பு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்தேன். இங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றத்தை டிரோன் காட்சி மூலம் ஆய்வு செய்தேன்.
இந்த உன்னத முயற்சிக்காக உத்தரகாண்ட் அரசுக்கும், முதல்வருக்கும் இப்பணிகளுக்கு பொறுப்பேற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் கேபிள் கார் மூலம் பக்தர்கள் கேதர்நாத்துக்கு வருவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த சகாப்தம் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சொந்தமானது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலம் அதிக சுற்றுலாப் பயணிகளை பெறும். உத்தரகாண்ட் எதிர் காலத்தில் புதிய உயரங்களை எட்டும். கேதர்நாத்துக்கு வருகைதரும் ஒவ்வொருவரும் உத்வேகத்தின் புதிய ஆற்றலை கொண்டு செல்கிறார்கள்.
தடுப்பூசி (கோப்புப்படம்)
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உத்தரகாண்ட் காட்டிய ஒழுக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. புவியியல் சிக்கல்களை கடந்து இன்று உத்தரகாண்ட் மக்கள் 100 சதவீத ஒன்றை டோஸ் இலக்கை அடைந்துள்ளனர்.
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி மீண்டும் பெருமை பெறுகிறது.
புத்த கயா உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. இந்தியாவின் கலாசார பெருமைகளை உலகமே வியந்து பார்க்கிறது. சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது நாடு தனக்கென பெரிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படுகிறது. கடினமான காலக்கெடுவை அமைத்துள்ளது. இது எப்படி இவ்வளவு குறுகிய காலத்திற்குள் நடக்கும்? அது நடக்கும் அல்லது நடக்காது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் காலவரம்புகளால் மிரட்டப்படுவதை இந்தியா இனி ஏற்காது.
இவ்வாறு அவர் பேசினார்.