அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை…!!
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது.
விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.