கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சிறையில் இருந்து விடுதலை…!!
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 2020-ம் ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார், சந்திப்நாயர் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 16 மாதங்களாக அவர் சிறையில் இருந்தார். உபா சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கேரளா ஐகோர்ட்
கேரள ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் உறுதி பத்திரம் கொடுத்த ஸ்வப்னா சுரேசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று (6-ந் தேதி) திருவனந்தபுரம் அட்டா குளங்கரா மகளிர் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார்.