கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு- சோகத்தில் முடிந்த ஹூஸ்டன் இசை விழா…!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் மேடையின் முன்பகுதியில் நேரம் செல்லச் செல்ல நெரிசல் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த சிலர், நெரிசலை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். இந்த தகவல் பரவி ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.