கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு….!!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்தது.
பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1- ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வரும் 15-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.