301 புதிய ரயில் சேவைகள் ஆரம்பம்…!!
கொவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த, கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில்கள் உட்பட மேலும் பல ரயில்கள் நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று முதல் 301 புதிய ரயில் சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
1 வருடமும் 8 மாதங்களுக்குப் பிறகு, நேற்று முதல் ரயில் சேவைகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வழமையான நேர அட்டவணைக்கு இணங்க அலுவலக நேரத்தில் பயணிக்கின்ற அனைத்து ரயில்களும், மேலும் பல தூர இடங்களுக்கான ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் வருகை வழமைக்கு திரும்பியுள்ளதனால், ரயில்களில் சன நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த புதிய ரயில் சேவைத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அத்தியாவசியமற்ற நேரங்களில் ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்றும், ரயில்களில் பயணிக்கும் போது கொவிட் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் ரயில்வே பொது முகாமையாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை ரயில் ,இருக்கைகளை முன்பதிவு செய்தல் மற்றும் ரயில் நிலைய ஓய்வறைகளை முன்பதிவு செய்தல் போன்ற வழமையான நடவடிக்கைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.