கடந்த ஒரு வருடமாக எதையும் செய்யாத அமைச்சர் !!
வாழைச்சேனை துறைமுகத்தினை விரிவுபடுத்துகின்றோம் என்ற பெயரிலே மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை காரணமாக நாசவன் தீவு பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் இல்லாத பிரச்சனை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே எனது கேள்விக்கான பதிலினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்குவார் என எதிர்பார்த்திருந்தேன். இதுவே முதல் தடவை இராஜாங்க அமைச்சர் எனது கேள்விக்கு பதில் வழங்கியிருக்கின்றார்.
பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்துள்ள நிலையிலும், நான் மீன்பிடி அமைச்சரிடம் ஐந்து, ஆறு கேள்விகள் கேட்டுள்ளேன்.
விசேடமாக பால்சேனையிலுள்ள மீன்பிடி துறைமுகம் குறித்து மற்றும் மீனவர்களுக்கான பாலம் அமைக்கவுள்ளமை குறித்து, அதே நேரத்திலே எங்களது மாவட்டத்திலுள்ள நாசவன் தீவு பற்றி, அதாவது அங்கு குடிநீர் இல்லாத பிரச்சனை உள்ளது.
ஏன் என்றால் அங்கு மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. வாழைச்சேனை துறைமுகத்தினை விரிவுபடுத்துகின்றோம் என்ற பெயரிலே மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை காரணமாக நாசவன் தீவு பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் இல்லாத பிரச்சனை உள்ளது.
இந்த இடத்திலே என்னுடைய கேள்வி என்னவென்றால் நாங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு வந்து எங்கள் மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கான கேள்விகளை எழுப்பி ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்து ஒரு வரவு செலவுத்திட்டம் முடிந்தும் கூட இதுவரை காலமும் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை.
அண்மையில் கூட அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மட்டக்களப்பிற்கு வருகை தந்து நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்திற்கு ஒரு குறிப்பிட்டளவு நிதியினை ஒதுக்கி அதற்கு திறப்பு விழா வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் இந்த ஒருவருட காலத்திற்குள் நாங்கள் மீன்பிடி துறையிலே வருமானத்தினை இழந்திருக்கின்றோம். சுருக்கு வலை காரணமாக கரைவலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடல் மீன்பிடித் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அமைச்சர் அவர்களே இந்த வருடமாவது, இந்த வரவு செலவுத்திட்டத்திலாவது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்களா?“ என கேள்வி எழுப்பியிருந்தார்.