யாழில் 240 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவு!!
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இதுவரை நீங்கவில்லை. இதன் அடிப்படையில் கடந்த 36 மணித்தியாலம் கொண்ட மழை வீழ்ச்சியில் 240 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்..
சீரற்ற வானிலை காரணமாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தினை தவிர 14 பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 9,105 குடும்பங்களை சேர்ந்த 30,325 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (10) வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழ்முக்கம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஊடகவியாளர்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினம் 86 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 06 இடங்களில் இடைத்தங்கல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு வீடு மாத்திரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 92 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள நீர் வடிந்து வருகின்ற நிலையில் நாளை பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும். வயல் நிலங்களும் வெள்ளத்தினால் முழுமையாக மூழ்கிய நிலையில் இருக்கின்றது. தொண்டைமாறு, நாவற்குழி, அரியாலை போன்ற வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் உரிய திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுப்பதற்கான எதிர்கூறல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்தார்.