மகாராஷ்டிரா மாநிலத்தில் வறுமையால் ஆண் குழந்தையை விற்ற பெண்…!!
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள டோம்பிவ்லி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அவரது குடும்பம் ஏற்கனவே வறுமையில் வாடியது. எனவே இந்த குழந்தையை வளர்க்க வழி இல்லாமல் தவித்தார். எனவே குழந்தையை விற்று விட முடிவு செய்தார்.
இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உதவி செய்தனர். அந்த குழந்தையை முலுண்ட் நகரைச் சேர்ந்த ஒருவர் வாங்குவதற்கு முன் வந்தார். அவரை அந்த பெண்கள் குழந்தையின் தாயிடம் அழைத்து வந்தனர்.
பேரம் பேசி ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்துக்கு அந்த நபர் குழந்தையை வாங்கினார். பின்னர் தனது வீட்டுக்கு குழந்தையை எடுத்து சென்று விட்டார்.
இந்த தகவல் போலீசுக்கு தெரிய வந்தது. அவர்கள் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து குழந்தை வாங்கியவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். குழந்தையின் தாய், விற்பதற்கு உதவிய 3 பெண்கள், மேலும் ஒருவர் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தை பராமரிப்பு பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.