சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 4 சிங்கங்களுக்கு கொரோனா…!!
கொரோனா பாதிப்பில் சிக்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. 523 பேர் உயிரிழந்துள்ளனர்.
மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ், மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 9 ஆசிய வகை சிங்கங்களும், 5 ஆப்பிரிக்க வகை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை திறந்தவெளியில் விட்டு இருந்தார்கள். இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று இவற்றை பார்ப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
அதில் ஆசிய வகை சிங்கங்கள் சில சோர்வாக காணப்பட்டன. சளி பிடித்து தும்மியபடியும் இருந்தன. எனவே சிங்கங்களுக்கு சோதனை நடத்தினார்கள். அதில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
ஆனாலும் அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நன்றாக உணவு சாப்பிடுவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆப்பிரிக்க வகை சிங்கங்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.