அமெரிக்காவில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை – அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்பு…!!
சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் .
நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.
நான்காவது நாளில் சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் படைப்பார்கள். மூங்கில் சிம்புகள் பின்னப்பட்ட தட்டு அல்லது முறத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து படைப்பார்கள். சன்னமான அரிசி மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்த்தை படைத்து உண்பார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சாத் விரத பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்கள் பலரும் நேற்று சாத் விரத பூஜையில் பங்கேற்றனர்.
அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள தாம்சன் பார்க்கில் திரண்ட வடஇந்திய பெண்கள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சாத் விரத பூஜை நடத்தினர். விழாவுக்கான் ஏற்பாடுகளை வட அமெரிக்காவில் உள்ள பீகார்- ஜார்க்கண்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது.