மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்…!!
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனால் மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 30-ந்தேதி 7-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன்மூலம் 17.14 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த மாதம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி தமிழகம் முழுவதும் 8-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
மழைக் காலத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களை வீடு வீடாக தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாவர்களை கண்டறிந்து போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
கன மழை பெய்த நிலையிலும் நேற்று 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரையில் 5 கோடியே 76 லட்சத்து 70 ஆயிரத்து 416 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.