;
Athirady Tamil News

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? கலாநிதி ஆறு. திருமுருகன் கேள்வி!! (படங்கள்)

0

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி, செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓய்வுநிலை மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இன்று முற்பகல் இந்த விழா இடம்பெற்றது.
அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி, ஆறு. திருமுருகன் மேலும் தெரிவித்ததாவது;

இந்து மக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டவர்கள். நாங்கள் படிக்கின்ற காலத்தில் கிறிஸ்தவ நண்பர்களோடு சேர்ந்து பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நான் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது என்னை முதன்முதலில் நேரடியாக வந்து வாழ்த்தியவர் தற்போது யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயராக உள்ள ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையே. அவ்வாறு நாங்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.

தற்போது ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தில் பல சபைகளை உருவாக்கி தமது மதத்துக்கு மதம் மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வறிய நிலையிலுள்ள மக்களுக்கு பணத்தைக் கொடுத்து மதமாற்றம் செய்வதை முன்னெடுக்கிறார்கள். அது ஏற்கக் கூடிய ஒரு விடயமல்ல.

நாங்கள் இந்துக்கள் எப்போதாவது எமது மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று எங்காவது கேட்டிருக்கின்றோமா? நாங்கள் கேட்க மாட்டோம்.

அதேபோலவே ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளை ஏனைய மதத்தவர்களை புறந்தள்ளி விட்டு ஒரு மதத்தவர்கள் மாத்திரம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? ஏனைய மதத்தவர்களோடு கலந்துரையாடாது ஒரு மதத்தவர்கள் மாத்திரம் எடுத்த முடிவினை ஏனையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

80வீதமாக உள்ள ஏனைய மதத்தவர்களை புறந்தள்ளிவிட்டு ஒரு மதத்தவர்கள் மாத்திரம் தமிழர்களின் திருநாளினை தீர்மானிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

இந்துக்கள் கிறிஸ்தவ மக்களுக்கோ, கிறிஸ்தவ துறவிகளுக்கோ எதிரானவர்களல்ல. நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம். இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்க போவதில்லை. ஆனால் நமக்கு ஒரு தாக்கம் ஏற்படும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது தானே – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.