ஆசிரியர்கள் – அதிபர்களின் போராட்டம் ஜனவரி 20 வரை இடைநிறுத்தம்!!
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை 2022 ஜனவரி 20ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பெற்றோர்களிடம் இருந்து நிதி வசூலிப்பதை நிறுத்த வேண்டும், அரசியல் காரணங்களுக்காக பாடசாலைகளில் நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்தக் கூடாது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் பாதீடு மூலம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 பரிந்துரைகள் இன்றைய விவாதத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வழங்கப்படவுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதை உறுதி செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புவதாக தலைமைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”