என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தலைவன் சுட்டுக்கொலை: மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர்…!!
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோர்சி பகுதியில் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று என்கவுண்டர் நடந்த கட்சிரோலி மாவட்டமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்கவுண்டர் குறித்து மகாராஷ்டி உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டீல், ‘‘என்கவுண்டரில் நக்சலைட் தலைவன் மிலிந்த் தெல்தும்டே சுட்டு வீழ்த்தப்பட்டார். இவன் தலைக்கு 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டவன்.
மொத்தம் 26 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
26 மாவோயிஸ்டுகளில் 20 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். இதில் தலைக்கு 16 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட மகேஷ் சிவாஜி என்பவரும் அடங்குவார். தலைக்கு 6 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நான்கு பேர் அடங்குவர்’’ என்றார்.