லிபியா அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டி…!!
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செயிப் அல் இஸ்லாம் பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தேர்தல் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சீப் அல் இஸ்லாம், நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை கடவுள் தீர்மானிப்பார் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, செயிப் அல்-இஸ்லாம் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
லிபியாவில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கடாபியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் 2011ல் கவிழ்ந்தது. அதன்பின்னர் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாமை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டை, உள்நாட்டு போருக்கு மத்தியில் கடாபி கொல்லப்பட்டார். 5 ஆண்டுகள் தடுப்புக் காவலுக்குப் பிறகு 2017ல் செயிப் அல் இஸ்லாம் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.