டெல்லியில் உச்சகட்ட காற்று மாசு: மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை…!!!
டெல்லியில் ஏற்கனவே வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் காற்று மாசு அதிகமாக உள்ளது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லி அருகே உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவு பொருட்களை வயல்வெளிகளில் போட்டு எரிப்பது வழக்கம். அந்த மாசுவும் காற்றோடு கலந்து டெல்லியை தாக்கும்.
தற்போது இதேபோல பயிர்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறுகிறார்கள். எனவே பள்ளிகளை மூடுவதுடன் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஒரே வழக்காக மாற்றி சுப்ரீம்கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூரியகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சு இந்த விசாரணையை நடத்தியது.
கடந்த சனிக்கிழமை விசாரணை நடந்தபோது காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்தலாம். இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் திங்கட்கிழமை (இன்று) பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மாநில அரசு சார்பில் அளித்த பதிவில் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.
இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட வேண்டாம். காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து செலவு செய்யுங்கள்.
டெல்லியில் உச்சகட்ட காற்று மாசு
டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு 7 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் தான் மாசு ஏற்படுகிறது என்ற வாதம் சரியானதல்ல. பயிர்களை எரிப்பதால் 10 சதவீதம் தான் மாசு பாதிப்பு ஏற்படுகிறது. மீதி பாதிப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே அதை விரிவாக ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதில் அவசரமாக செயல்பட வேண்டும்.
தேவைப்பட்டால் டெல்லியில் வாகன போக்குவரத்தை 3 நாட்களுக்கு நிறுத்தி வையுங்கள். காற்று மாசு குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும். காற்றுத்தர கண்காணிப்புக் குழு அண்டை மாநிலங்களுடன் இதுபற்றி பேச வேண்டும்.
இது சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுத்து நாளை மத்திய, மாநில அரசுகள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.