கேரளாவில் பயங்கரம்: பட்டப்பகலில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை…!!
கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் இன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை எதிரொலியால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது முழுக்க முழுக்க இந்திய சமூக ஜனநாயக கட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கொலை என்றும், ஆளும் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்துள்ளதால் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றும் பாலக்காடு மாவட்ட பாஜக தலைவர் கே.எம். ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.