;
Athirady Tamil News

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் – பிரதமரின் முழு உரை இணைப்பு…!!

0

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான முன்மொழிவுகள் எதிர்வரும் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,

மிகவும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்தமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்க விரும்புகிறேன்.

பல துறைகளின் சவால்களுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றே கூற வேண்டும். இது முக்கியமாக கொவிட்-19 பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதையும் பாதித்து மக்களைக் கடுமையாகப் பாதித்தது. அந்த தாக்கங்களில் இருந்து இலங்கையால் கூட விடுபட முடியவில்லை.

மேலும், கொவிட் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாம் முன்னெடுத்த செயற்பாடுகளின் ஊடாக பொருளாதாரத்தை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றோம்.

வரையறுக்கப்பட்ட அரச நிதியை கொண்டிருந்த போதிலும், சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டது.

இதுவரை நாம் சுமார் 60,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம். வறுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் (100,000) பயிற்சி பெறாத நபர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.

அரச துறையில் புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் சுமார் 3.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது.

சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. நீர் வழங்கல், எரிசக்தி, போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக தொடர்ந்து மேற்கொண்டுள்ள முதலீடுகள் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இது பொருளாதாரத்தின் இயக்கவியல் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை நிரூபித்துள்ளது.

எவ்வாறாயினும், அண்மைக் காலங்களில் அரச நிதி தொடர்பாக பல கடுமையான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இருப்பினும், எதிர்வரும் காலங்களில் எதிர்பார்த்தபடி பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்திக்கான வசதிகளை ஏற்படுத்தல் என்பவற்றை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

தொற்றுநோயின் தாக்கத்தால் நமது பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. அந்நியச் செலாவணி, பணப்புழக்கம் மற்றும் ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கு, எதிர்காலத்தில் அந்நியச் செலாவணி வரவைப் பாதுகாக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உலகளாவிய சுற்றுலாத் துறை மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க சாதகமான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் அனுப்பும் பணத்தை வங்கி முறைக்கு ஈர்ப்பதற்கும் நாங்கள் மத்திய வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

வெளிநாட்டுத் துறையின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கு குறுகிய கால மூலோபாய திட்டங்கள் உட்பட பொருளாதாரத்தில் அனைத்து பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ´பாரிய பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஆறு (6) மாதக் கண்ணோட்டம்´ மத்திய வங்கியினால் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பொருளாதாரம் ஒரு சவாலான காலகட்டத்தை கடந்து செல்வதை நாம் அறிவோம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கான முன்மொழிவுகள் எதிர்காலத்திலும் அதற்குப் பின்னரும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கையில் எமது எதிர்காலத் திட்டங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பயனளிக்கும் மக்களை மையமாகக் கொண்ட சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த பலம் கிடைத்துள்ளது.

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு நாம் செயற்படுத்தும் நிலையான வேலைத்திட்டத்துடன் கைக்கோர்த்து நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பங்களிக்குமாறு அனைவரிடமும் கோருகின்றோம் என பிரதமர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.