இலங்கை அரசின் தற்போதைய நிலையை, போட்டுடைத்த “புளொட்” தலைவர் சித்தார்த்தன்.. (முழுமையான உரை)
இலங்கை அரசின் தற்போதைய நிலையை போட்டுடைத்த “புளொட்” தலைவர் சித்தார்த்தன்.. (முழுமையான உரை)
நேற்றையதினம் இலங்கைப் பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய முழுமையான உரை..
பாதீட்டு உரை–2021 – த.சித்தார்த்தன் (16.11.2021)…
காலம்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1973இல் கூறிய ஒரு விடயத்தை இப்போது நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன். ‘நாடு எரிமலையின் மீது அமர்ந்திருக்கின்றது’ – அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம். அன்று சிறிமாவோ அம்மையார் கூறியது இப்போது தான் மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. அந்தளவிற்கு நாடு அதளபாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை இருள் சூழலாம்.
உண்மையில் இந்த நாடு எந்த நிலையிருக்கின்றது? பஞ்சத்தில் மக்கள் சாக நேரிடுமோ – என்று அஞ்சுமளவிற்கு – பொருள் தட்டுப்பாடு. ஏழை மக்களால் சமாளிக்கவே முடியாதளவிற்கு விலைவாசி உயர்வு, அன்னியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்டிருக்கும் மோசமான வீழ்ச்சி, மோசமான நிதி நெருக்கடியென, நாட்டின் பொருளாதார நிலை வங்குரோத்து நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இலங்கையின் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி இதற்கு முன்னர் ஓரு போதுமே ஏற்பட்டதில்லை.
இதற்கு என்ன காரணம்? இப்படியொரு கேள்வியை முன்வைத்தால் – உடனே பலரும் கூறும் பதில் கொரோனா பெருந்தொற்று. அரசாங்கத் தரப்பிலுள்ளவர்கள் பொதுவாக கூறும் பதில் இதுதான். ஆனால் நாங்கள் நேர்மையாக கேட்டுக் கொள்வோம் – இன்றைய நெருக்கடி நிலைக்கு உண்மையிலேயே கொரொனா பெருந்தொற்று மட்டும் தான் காரணமா? கொரொனா பெருந்தொற்று என்பது ஒரு உலகளாவிய நெருக்கடி. பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் உண்மைதான். ஒரு உலகளாவிய நெருக்கடி ஏற்படுகின்ற போது நிச்சயம் இலங்கையும் பாதிப்படையும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆனால் இந்த நெருக்கடி நிலையை பல நாடுகளும் வெற்றிகரமாக சமாளித்திருக்கின்றன. ஒரு அரசாங்கத்தின் வெற்றியென்பது – நெருக்கடி நிலையை கையாளுவதில் தான் தங்கியிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம் பங்களாதேஸ். அவர்களும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் ஆனால் பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்திருக்கின்றனர். பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்களால் இலங்கைக்கு கடன் வழங்க முடிந்திருக்கின்றது. ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்களால் இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க முடியவில்லை. திணறுகின்றனர்.
எனவே இன்றைய நெருக்கடி நிலைக்கு கொரோனாவும் ஒரு காரணம் தான். அதனை நாம் மறுக்கவில்லை. ஆனால் அதனை மட்டுமே ஒரு காரணமாக பார்ப்பதில் தான் நீங்கள் தவறு செய்கின்றீர்கள். உண்மையில் இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இது ஒரு புற்றுநோய் போன்று வெகுகாலமாக வளர்ந்து வந்த ஒன்று. இப்போது மறைக்க முடியாதளவிற்கு நோய் முற்றி விட்டது.
இலங்கையை மாறி மாறி – ஆட்சி செய்த அரசாங்கங்கள் எவையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை காண்பிக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது மேலும் மேலும் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது பற்றியே சிந்தித்தீர்கள்.
இலங்கைத் தீவை – மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பெரும் கட்சிகளுமே இதற்கு விதிவிலக்கல்ல. எதேச்சாதிகாரப் போக்கின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியே சிந்தித்தீர்கள். தனிநபர்களாக சிலர் எங்களுடைய நியாயத்தை புரிந்து கொண்டிருக்கலாம் ஆனால் தென்னிலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் போக்கானது எப்போதுமே தமிழ் மக்களை இரண்டாம் தரமாக கருதும் ஒன்றாகவே இருந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் புறக்கணிப்பட்ட காரணத்தினால்தான் இந்த நாடு ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் சிக்கியது. நாட்டின் ஒட்டுமொத்த வளமும் யுத்த வெற்றியில் முதலீடு செய்யப்பட்டது. யுத்த வெற்றிக்காக பல நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையேற்பட்டது. இதனால் தான் நாடு பெரும் கடன்சுமைக்குள் சிக்கியது. அத்துடன் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பின்னடைவைக் கண்டது.
பாதீடு தொடர்பில் நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்ற போது உலகின் இரண்டாம்நிலை சக்தியான சீனாவினால் நாட்டின் பிரதான அரச வங்கியான மக்கள் வங்கி கறுப்பு பட்டிலில் சேர்க்கப் பட்டிருக்கின்றது என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பிய யுத்த வெற்றிக்காக முழு நாட்டையும் அடகுவைக்க நீங்கள் தயங்கவில்லை. இதன் காரணமாகத் தான் – இந்த நாடு இன்று வல்லரசுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கியிருக்கின்றது. நீங்கள் விரும்பிய யுத்த வெற்றி உங்களுக்கு கிடைத்து விட்டது ஆனால் உங்களால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. பொருளாதார ரீதியில் கையேந்தாத – இலங்கை சமூகமொன்றை உருவாக்குவதில் – உங்களால் வெற்றிபெற முடிந்ததா?
இந்த நாடு எதிர்கொண்டிருக்கும் வரலாற்று நெருக்கடிக்கான உண்மையான காரணத்தை இந்த பின்னணில் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் எத்தனையோ வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கவில்லை.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஆரம்பத்திலேயே பூர்த்தி செய்யப் பட்டிருந்தால் – இந்த நாடு யுத்தத்தை நோக்கி சென்றிருக்காது. நாட்டின் வளமும் சிதைந்திருக்காது. நாடு கையேந்தும் நிலைக்கும் சென்றிருக்காது. இவ்வாறானதொரு வரலாற்று நெருக்கடிக்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.
தமிழ் மக்களை எப்போதுமே இரண்டாம்தர பிரஜைகளாக வைத்திருக்க வேண்டுமென்னும் உங்கள் தீராத ஆசையினால் நீங்கள் சாதித்தது என்ன? இன்று கொரோனா தொற்றினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கின்றனர். நாட்டின் அனைத்து இன மக்களும் – குறிப்பாக ஏழை மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். சிங்கள இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி செல்வதற்காக வரிசையில் நிற்கின்றனர். ஒரு காலத்தில் இராணுவ கெடுபிடிகளாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலாலும் – எமது இளைஞர் யுவதிகள் நாட்டைவிட்டு வெளியேறினர்.
அவ்வாறானவர்கள் தான் இன்று புலம்பெயர் சமூகமாக வளர்ச்சியுற்றிருக்கின்றனர். இன்று பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாமல் சிங்கள – இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
உங்களது தவறான கொள்கைகளால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ;டட்டைக் கூட நீங்கள் வழங்கவில்லை. இந்த பாதீட்டில் அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.
நாடு வரலாறு காணாத நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கூட – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்னும் சுலோகத்தின் கீழ் பௌத்தபிக்கு ஒருவரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப் பட்டிருக்கின்றது. இந்த நாட்டின் நீதித்துறை அமைச்சருக்கே அந்த செயலணி பற்றி தெரிந்திருக்கவில்லை.
ஒரு புறம் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவரும் அரசாங்கம் – மறுபுறம் இப்படியானதொரு செயலணியையும் உருவாக்கியிருக்கின்றது. இதன் மூலம் நீங்கள் எதை கூற முற்படுகின்றீர்கள்? உண்மையிலேயே நீங்கள் எதைசெய்ய முயற்சிக்கின்றீர்கள்? இந்த நாட்டில் நடைமுறையிலிருந்து வரும் தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லீம் சட்டம் என்பவற்றை இல்லாதொழிப்பதுடன், அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தினூடாக மாகாணசபைகள், பிரதேசசபைகளுக்கு கிடைக்கப் பெற்ற அற்பசொற்ப அதிகாரங்களையும் அபகரித்து விடும் கபட நோக்கங் கொண்டதாகவே இந்த ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற எண்ணக்கருவை சந்தேகக கண்களுடன் நாம் நோக்குகின்றோம்.
அரசாங்கத்தின் நடவடிக்கை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்கள் இரண்டுமே எமது மக்களின் பங்குபற்றல் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டது. எமது தலைவர்கள் அதனை எதிர்த்திருந்தனர். ஆனால் பெரும்பான்மை ஜனநாயகம் என்னும் பெயரால் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
1972இல் அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டபோது எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களுக்கு சாதகமாக இருந்ததாக கருதப்பட்ட சோல்பெரி யாப்பின் 29வது சரத்து நீக்கப்பட்டது. 29வது சரத்து இருந்த போதுதான் 1956ல் தனிச்சிங்கள சட்டம் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க அவர்களால் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பே இந்திய – பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு பத்து லட்சம் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள்.
அரசியல் யாப்பின் மூலம் எங்களுக்கு இருந்த ஒரளவு பாதுகாப்பை கூட இல்லாமலாக்கினீர்கள். இப்போதும் நீங்கள் அப்படியானதொரு உள் நோக்கத்துடன்தான் செயற்படுகின்றீர்களோ – என்னும் சந்தேகம் எங்களிடம் உண்டு. நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விடயங்களும் எங்களுடைய சந்தேகத்தை ஊர்ஐதம் செய்கின்றன.
இன்று தமிழ் மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருப்பது – தமிழ் மக்களும் ஓரளவாவதுரூபவ் அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பது – 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற 13வது திருத்தச்சட்டம் ஒன்றுதான். அதனையும் திட்டமிட்டு இல்லாமலாக்கும் நோக்கில் தான் நீங்கள் செயற்படுகின்றீர்களா? அதுதான் உங்களது புதிய அரசியல் யாப்பிற்கு பின்னால் ஒழிந்திருக்கும் உள்நோக்கமா?
உண்மையில் இலங்கை ஒரு அதிசயமான நாடு என்பதையும் – நான் இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன். இந்த பதிவானது இந்த நாட்டை நேசிக்கும் அடுத்த தலைமுறைக்கான சமர்ப்பணமாகும். ஏனெனில் வேறு எந்தவொரு நாட்டிலும் நடந்திராத அதிசயம் இந்த நாட்டில் தான் நடந்திருக்கின்றது – நடந்து கொண்டிருக்கின்றது.
அதாவது அரசியல் யாப்புத்தான் ஒரு நாட்டின் அதியுயர் சட்டம். அதனை நிறைவேற்றுவோம் என்னும் சத்தியத்தின் அடிப்படையில் தான் நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஆனால் நீங்கள் சத்தியம் செய்த அரசியல் சாசனத்தையே எந்தவொரு குற்றவுணர்வுமில்லாமல் மீறி வருகின்றீர்கள்.
அரசியல் யாப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை இன்றுவரையில் நீங்கள் முழுமையாக அமுல்படுத்தவில்லை. அரசியல் யாப்பை மீறுவதில் நீயா? – நானா? என்றுபோட்டி போடுகின்றீர்கள். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த மறுப்பதானது அரசியல் யாப்பை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும். இதனை உணர முடியாதளவிற்கு எதேச்சாதிகாரம் உங்களின் கண்களை மறைத்திருக்கின்றது. நாட்டின் அதியுயர் சபை ஒன்றிலேயே அத்துமீறல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு நீங்கள் அனைவரும் துணைபோய் கொண்டிருக்கின்றீர்கள்.
முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச 13 பிளஸ் தொடர்பில் பேசினார். இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கும் அவ்வாறான வாக்குறுதியை வழங்கியிருந்தார். 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் 13இ;ற்கு அப்பால் சென்று தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி மகிந்த வாக்குறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இப்போது மீண்டும் உள்ளக பொறிமுறை தொடர்பில் பேசுகின்றீர்கள்! புலம்பெயர் சமூகத்துடன் பேசவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
அரசியல் யாப்பில் இருக்கின்ற 13வது திருத்தச்சட்டத்தையே முழுமையாக அமுல்படுத்த மறுத்து வரும், உங்களது உள்ளக பொறிமுறையை சித்தசுவாதினமுள்ள எவராவது நம்புவாரா? இந்த அரசாங்கத்தினால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமென்பதில் எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை. ஏனெனில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு காரியத்தையும் நீங்கள் செயலில் காண்பிக்கவில்லை.
உண்மையில் நீங்கள் கூறும் புதிய அரசியல் யாப்பானது – ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்ட – தமிழ் மக்களின் சமத்துவம் கௌரவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கின்ற – முக்கியமாக அவற்றை பாராளுமன்ற பெரும்பாண்மையின் ஊடாக மீளவும் பறித்தொடுக்க முடியாத ஏற்பாடுகளை கொண்டிருக்குமானால் அப்படியானதொரு அரசியல் யாப்பை நாம் இரு கரம்கூப்பி வரவேற்போம்.
ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை உற்றுநோக்கினால் அரசாங்கத்திடம் அப்படியான எந்தவொரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அப்படியான நோக்கம் அரசாங்கத்திடம் இருந்திருந்தால் – இன்று இருப்பவற்றையும் பறித்தெடுப்பது பற்றி நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள்.
கிழக்கு மாகாணத்தின் தமிழ் பெரும்பான்மையை திட்டமிட்ட குடியேற்றங்களால் மாற்றியமைத்தது போன்று இப்போது வடக்கின் மீதும் கண் வைத்திருக்கின்றீர்கள். வடக்கு மாகாணத்தின் சனத்தொகையையும் மாற்றியமைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செயற்படுகின்றீர்கள். உங்களுக்கு நல்லிணக்கத்தில் உண்மையான டுபாடு இருந்திருக்குமாயின் இவ்வாறானதொரு நடவடிக்கைக்கு நீங்கள் ஆதரவளித்திருப்பீர்களா?
வவுணியாவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமொன்றை மேற்கொண்டு வருகின்றீர்கள். அனுராதபுர மாவட்டத்தின் கீழுள்ள நான்கு சிங்கள கிராம சேவையாளர் பிரிவுகளை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இனப்பரம்பலை மாற்றியமைக்க திட்டமிடுகின்றீர்கள். மாகாண எல்லைகளை நிர்வாக ரீதியாக மாற்ற முடியாதென்பது தெரிந்திருந்தும் நாட்டின் சட்டத்திற்கு எந்தவித மதிப்புமளிகாமல் எதேச்சதிகாரமாக
தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றீர்கள்.
மாகாண சபை செயலற்றிருக்கும் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆளுனர்கள் மூலம் திட்டமி;ட்டு இந்த விடயங்களை மேற்கொண்டு வருகின்றீர்கள். மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகள், வைத்திசாலைகளை திட்டமிட்டு மத்திய அரசின் கீழ் கொண்டு செல்கின்றீர்கள். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்கூட இப்போது 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் ஒரு இரகசிய படையணியாக தொழிற்படுகின்றதோ என்னும் சந்தேகம் எழுந்திருக்கின்றது. ‘சுகாதார துறையை மத்தியமயப்படுத்துதல்’ என்னும் தலைப்பில் 2021 அன்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பெர்ணாண்டோ வடக்கிலுள்ள கிளைகளுக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார். அரசாங்கத்திற்கு தெரியாமல் இவ்வாறானதொரு கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை எவ்வாறாயினும் இல்லாமலாக்க வேண்டுமென்னும் இனவாத முனைப்பின் தீவிரத்தன்மையே இந்த கடிதம் உணர்த்துகின்றது. அப்படியாயின் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது நாட்டிலும் – நாட்டை நிர்வகிக்கும் சட்டத்திலும் – தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவொரு இடமும் இல்லை இருக்கவும் கூடாது தமிழ் மக்கள் இந்த நாட்டில் வேண்டுமானால் இரண்டாம்தர பிரஜைகளாக வாழ்ந்து விட்டு போகலாம். இதுதான் அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டமா?
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். ஏற்கனவே 13இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள். எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உங்களின் அர்ப்பணிப்பை நிரூபித்து காட்டுங்கள்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமலாக்க வேண்டும் என்னும் ஒரேயொரு நோக்கம் கொண்ட உங்களது புதிய யாப்பு முயற்சியை கைவிட்டு முதலில் இந்த நாட்டின் அரசியல் யாப்பிற்கு உண்மையானவர்களாக நடந்து கொள்ளுங்கள். 13iஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்.
இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கிருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டடு வழங்கப்படத்தான் வேண்டும். ஆனால் -அந்த மக்கள் உங்களிடம் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது – நஷடடு அல்ல. அவர்கள் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்றே கேட்கின்றனர். தங்களுக்கான நீதியை கோரி வருகின்றனர். வெறுமனே குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாய்களை கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பதுயரங்கள் தீர்ந்து விடாது. சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்வதன் மூலமே யுத்த காலத்தில் காணமலாக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும்.
நாங்கள் கோரும் நீதிப் பொறிமுறை என்பது தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல – அது சிங்கள மக்களுக்கானதும் என்பதை உணருங்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களினது மட்டுமல்லாது நாட்டின் முற்போக்கு சிந்தனையாளர்களினதும்; சர்வதேச சமூகத்தினதும் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அனைத்து அரசாங்கங்களும் அரசுக்கு மாறான கருத்துக்களை கொண்டவர்களை பயங்கரவாதி என்னும் பெயரில் கைது செய்வதற்கும் சிறைகளில் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகிறது. எனவே இச் சட்டத்தை இல்லாதொழிப்பதுடன் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவித்தல் வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அதேவேளை அண்மையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் முன்முயற்சியால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறையில் இருந்த 16 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். அதற்காக ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதோடு தடுப்பிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும்; தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இன்று இந்து-பௌத்த நல்லுறவு பற்றி பேசுகின்றீர்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மிகவும் பலமான நிலையிலுள்ள பாரதிய ஜனதா கட்சியை திருப்திப்படுத்துவதற்கு -இந்துத்வா கருத்தியலுக்கு நெருக்கமானவர்களாக உங்களை காண்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றீர்கள்.
இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட – கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு போகின்றார் – இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்தை கொண்டு வருகின்றீர்கள். அமைச்சர் நாமல் ராஜபக்ச – சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத்தை கீதையின் பிரதியை பிரதமர் மோடிக்கு பரிசளிக்கின்றார்.
இதன் மூலம் நீங்கள் கூறவருது தெளிவாகவே புரிகின்றது. பி.ஜே.பியை திருப்திப்படுத்துவதற்காக இந்துத்வா ராஜதந்திரத்தை கையிலெடுத்திருக்கின்றீர்கள். இந்து-பௌத்த ஒற்றுமை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால் மறுபுறும் வடக்குகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இந்து தமிழ் மக்களின் சமத்துவம் கௌரவத்தை உறுத்திப்படுத்துவதை எதிர்க்கின்றீர்கள். பாரம்பரிய இந்து ஆலயங்களை பௌத்த விகாரைகளாக பிரகடனப்படுத்துகிறீர்கள். அவ் இடங்களை பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பதற்கு உங்கள் படைகள் உதவுகின்றன.
இன்று பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருக்கின்றீர்கள். ஆனால் இந்து மதத்தினதோ அல்லது இலங்கையில் உள்ள ஏனைய மதங்களினதோ வளர்ச்சிக்கு நிதியொதுக்கவில்லை. இங்கும் உங்களுடைய உள்நோக்கம் வேறு என்பதை நாமறிவோம். இந்துத்வா கருத்தியலுக்கு நெருக்கமானவர்களாக உங்களை காண்பித்துக் கொண்டு இந்தியாவின் ஆதரவுடன் 13வது திருத்தச்சட்டத்தை இல்லாமல் ஆக்கலாம் என்று எண்ணுகின்றீர்கள். 13வது திருத்தத்தை தூக்கிவிட்டு தமிழ் மக்களுக்கு இலங்கையின் அதிகாரத்தில் எந்தவொரு பங்கினையும் வழங்க முடியாதென்று கூற முற்படுகின்றீர்கள்.
அதாவது இந்தியாவின் இந்து மக்களை பயன்படுத்தியே வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களை அதிகாரமற்றவர்களாக்கலாம் என்று கணக்குப் போடுகின்றீர்கள். இவ்வளவு அனுபவங்களுக்கு பின்னருங்கூட – தமிழ் மக்களை எவ்வாறு மேலும் ஒன்றுமில்லாதவர்களாக்கலாம் என்றே சிந்திக்கின்றீர்கள்.
இறுதியாக ஒன்றை மட்டுமே கூற விரும்புகின்றேன்.. பல இனங்களைக் கொண்ட பல மொழிகளை பேசுபவர்களைக் கொண்ட -இந்தியா, சுவிஸ்ஸர்லாந்து, ஜேர்மனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற- நாடுகள் இன, மொழி பாகுபாடுகளுக்கு அப்பால், சமஷ;டி முறையிலான ஒரு நியாயமான அதிகார பகிர்வுகளை தங்களின் அரசியல் யாப்புகளினூடாக உறுதிப்படுத்தி ஒன்றுபட்டு பொருளாதார ரீதியிலும் ஏனைய துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியையும் அபிவிருத்திகளையும் அடைந்துள்ளதைக் காணமுடியும்.
இனியாவது கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். எதேச்சாதிகார அரசியலை தூக்கவீசிவிட்டு தமிழ் மக்களின் சமத்துவம் கௌரவத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுங்கள். ஒரு காலத்தில் தனிநாடு தொடர்பில் சிந்தித்த தமிழ் தலைமுறை இப்போதில்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் – எங்கள் பகுதிகளில் எமது அலுவல்களை நாமே நிர்வகித்துக் கொள்ளக்கூடிய- கௌரவத்துடனான ஒரு சமஷ;டி அமைப்பு முறையிலான அரசியல் தீர்வினூடாக நாமும் இந்த நாட்டின் சமூக பொருளாதார அரசியல் வளர்ச்சியில் பங்களிப்பதற்கான வாய்புக்களை பற்றித்தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு தனித்துவம் மிக்க தேசிய இனத்தை ஒடுக்குமுறைக்குள் வைத்துக் கொண்டு – இரண்டாந்தரமாக நடத்திக் கொண்டு – இலங்கைத் தீவு ஒரு போதுமே முன்னோக்கி பயணிக்க முடியாது என்பதை இனியாவது உணருங்கள். ஒரு இனத்தை ஒடுக்கும் மற்றய இனம் வளர்சியடைந்ததாக வரலாறில்லை. தேர்தல் வெற்றியை விடுத்து நாட்டின் வெற்றி தொடர்பில் சிந்தியுங்கள்.
நன்றி.