வவுனியாவில் ஆசிரியரொருவர் மீது அதிபரால் முறைப்பாடு பதிவு!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பாசிரியர்களுக்கு பாடசாலைக்குள் சென்று அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை புகைப்படம் எடுத்ததாக தெரிவிக்கப்படும் ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு பாடசாலையின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை பாடசாலையில் வகுப்புக்கள் இடம்பெற்ற போது முன்னர் அங்கு கடமையாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள் சென்று வகுப்பு ஆசிரியர்களுடன் முரண்பட்டு, அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை அவரது கைத்தொலைபேசியில் புகைப்படம் பிடித்துள்ள சம்பவம் குறித்து பாடசாலையின் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியர், பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய போது ஓய்வு பெற்றுச் சென்ற பாடசாலையின் அதிபருடன் பல்வேறு முரண்பாடுகளையும், பாடசாலை சமூகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்ட நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”