முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கனமழை!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் இன்றும் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு , துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக மாங்குளம் பகுதியில் 91 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த மழைவீழ்ச்சி காரணமாக மாங்குளம், துணுக்காய் வீதியில் உதயசூரியன் கிராமம்,கற்குவாரி 50 வீட்டுத்திட்டம், பனிக்கன்குளம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், மாங்குளம் – துணுக்காய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தின் பல பகுதிகளிலும் பனிக்கன்குளம் கிராமத்திலும் வெள்ள நீர் காரணமாக 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பலரது வீடுகளுக்குள் வெள்ள நீரும் புகுந்துள்ளது.
வடமாகாணத்திற்கும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.