மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்- போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாட்டில் மீண்டும் மகன் வீட்டில் ஒப்படைப்பு…!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி(வயது 90). கணவரை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வந்தார். மகன் வெளிநாடு சென்றதும் தாவூத்பீவியை அவரது மருமகள் கடந்த மாதம் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் தனது மூத்த மகன் ஷேக் அலாவுதீனிடம், தாவூத்பீவி சென்றார். அங்கும் அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தன்னை பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் என்றும் பாராது அவரும் தாவூத்பீவியை விரட்டி விட்டுள்ளார். இதனால் வேறுவழியின்றி தாவூத்பீவி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரும் தனது தாயை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதை அறிந்த வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் தாவூத்பீவியை தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ளுமாறு கூறியும் மகன்கள் இருவரும் கேட்கவில்லை.
இதனால் ஆதரவு இல்லாமல் நிர்கதியான தாவூத்பீவி அக்கம், பக்கத்தினர் அளித்த உணவை உண்டு தனது வாழ்நாளை கழித்து வந்தார்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டரின் மனு நீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்துகொண்ட தாவூத்பீவி தனது நிலையை எடுத்துச்சொல்லி தன்னை தனது பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
எனது வீட்டை பிடுங்கிக்கொண்டு அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். ஒருவேளை உணவுகூட கொடுக்க விருப்பம் இல்லாமல் என்னை துரத்தி விட்டுள்ளனர். எனக்கு உரிய சொத்தை அளித்தாலே இறுதி வரை நான் நிம்மதியாக வாழ்வேன். இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறினார்.
இதனையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் தாவூத்பீவியை அவரது இளைய மகன் அஷரப் அலி வீட்டில் ஒப்படைத்து அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டுச்சென்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்து கொண்டு இருந்த நேரத்தில் தாவூத்பீவியை வீட்டை விட்டு வெளியேற்றி வாசற் கதவை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருக்க இடம் இல்லாமல் தெருவில் மழையில் நனைந்தபடியே தாவூத்பீவி அக்கம் பக்கத்தினர் கொடுத்த உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இதுகுறித்த தகவல் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கவனத்திற்கு சென்றது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் மனோகர் மற்றும் குத்தாலம் போலீசார், வாணாதிராஜபுரம் ஊர் ஜமாத்தார்கள் மூதாட்டி தாவூத்பிவீயை அவரது மூத்த மகன் ஷேக் அலாவுதீன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை விட்டுச்சென்ற போலீசார், அவருக்கு அறிவுரைகள் கூறி பெற்ற தாயை இறுதி வரை நல்லமுறையில் பராமரிக்குமாறு கூறினர். இதனால் பல நாட்களாக இருக்க இடமின்றி, சாப்பிட வழியின்றி தவித்து வந்த மூதாட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் மூதாட்டியை பராமரிக்காமல் விரட்டி அடித்தால் மூதாட்டியிடம் புகார் மனு பெற்று மகன்களிடம் இருக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.