ஆர்ப்பாட்டங்கள் செய்தால் டொலர் கிடைத்து விடுமா?
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள், கச்சாய் எண்ணெயைக்
கொண்டு வருமாறு கோரி நேற்று முன்தினம் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த
அமைச்சர் உதய கம்மன்பில, அவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதால் டொலர் கிடைத்து
விடுமா என கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் இருக்கும் அந்நியச் செலாவணியை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் கச்சாய் எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்தினோம். எனவே, ஆர்ப்பாட்டம் செய்வதால் டொலரின்
பெறுமதி குறைந்து, கச்சாய் எண்ணெயை கொள்வனவு செய்ய முடியுமாயின் தானும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் செய்து, அந்நிய செலாவணியை ஈட்ட முடியுமாயின், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்று, கஸ்டப்பட்டு சம்பாதிப்பதை விட, இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி சம்பாதித்திருக்கலாம் என்றார்.
எரிசக்தி அமைச்சர் என்ற ரீதியில் தன்னால் டொலரை சம்பாதிக்க முடியாது. எண்ணெய்
இறக்குமதிக்கான பணத்தை திறைசேரி தனக்கு வழங்கியிருக்க வேண்டும். அப்படியாயின்
தன்னாலும் டொலரை வழங்குமாறு கோரி, திறைசேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை
நடத்தியிருக்கலாம்.
ஆனால், அதற்கு பதிலாக தான் திறைசேரிக்கு டொலரை சம்பாதிப்பதற்கான
மாற்று வழியை ஏற்படுத்தி கொடுத்தமை மாத்திரம் என்றார். நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் நாம் முடிவெடுக்கும் போது,
அந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பது தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும்.
அந்த முடிவுகள் தவறு எனின் அதற்கான மாற்று வழியை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, இவ்வாறு சிறுபிள்ளைத் தனமான தொழிற்சங்க நடவடிக்கைகள்தான் பல அரச நிறுவனங்கள் மூடு விழா கண்டமைக்கு காரணம் என்ற கசப்பான உண்மையை நினைவுப்படுத்துகிறேன் என்றார்.