செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்…!!
விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விண்கலத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனிடையே ரஷியாவின் இந்த ஏவுகணை சோதனை ஆபத்தான மற்றும் பொறுப்பற்றது என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் “இன்று, ரஷிய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் அதன் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக, நேரடியாக தாக்கக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன” என கூறினார்.