பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் திடீர் பள்ளம் – வாகன போக்குவரத்து நிறுத்தம்…!!
பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஆழியாறு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. விடிய, விடிய பெய்த மழை காரணமாக நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது திடீரென சாலையில் ஒரு பகுதியில் சிறிய அளவில் பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிக கவனமுடன் வாகனத்தை இயக்கி செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி வாகன ஓட்டிகள் அதனையொட்டிய பகுதிகளில் மெதுவாக வாகனங்களை இயக்கி சென்றனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் இன்று காலை அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளம் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பெரியளவில் ஏற்பட்டது.
இதையடுத்து, பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை மற்றும் ஆழியார் பகுதிகளுக்கு அரசு பஸ்கள், லாரிகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் வால்பாறை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொள்ளாச்சி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றிரவு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலையில் மழை சற்று குறைந்து விட்டதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளனர்.
தற்போது வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, 3500 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஆழியாறு அணை அருகே சின்னார்பதியில் வசிக்க கூடிய மலைவாழ் மக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அவர்களை ஆழியாறு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். இதையடுத்து மழை குறையும் வரை விடிய, விடிய அங்கேயே காவல் இருந்தனர்.