கூட்டுறவு வார விழா: 869 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் காந்தி வழங்கினார்…!!
கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில், மாவட்ட அளவிலான 68-வது கூட்டுறவு வார விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்று பேசினார்.
விழாவில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, கூட்டுறவு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் 869 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் நேரடியாக பயனடையும் மிக முக்கியமான துறை கூட்டுறவு துறை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டுறவு துறை சரியாக செயல்படவில்லை என்றாலும், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 6 மாதத்திற்குள் கூட்டுறவு துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளும் உலகமே பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
இந்த மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 120-ம், இதர கூட்டுறவு நிறுவனங்கள் 57-ம், மத்திய கூட்டுறவு வங்கிகள் 22-ம் உள்ளன. 2006-ம் ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 64,102 பேருக்கு ரூ.244 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு 120 சங்கங்கள் மூலமாக 28,400 பேருக்கு ரூ230.79 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது ரூ.376 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய உள்ளது.
இந்த மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு ரூ.57.90 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மழை, வெள்ளம் பகுதிகளுக்கு தினமும் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகிறார். தேர்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். எனவே, தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் போது, ரூ.1 கோடி மதிப்பில் தளி, உத்தனப்பள்ளி, நல்லராலப்பள்ளி, அஞ்செட்டி ஆகிய கூட்டுறவு சங்கங்களின் அலுவலகங்களை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், முன்னாள் எம.்பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிருஷ்ணகிரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வம் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.