சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை…!!
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் நிவாரணத்தை வழங்க வேண்டும்.
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணம், இழப்பீடு போதுமானதல்ல.
குறிப்பாக விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையில் மூழ்கி வீணாகிவிட்டது.
அது மட்டுமல்ல விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதே போல சேதமடைந்துள்ள சம்பா பயிர்களுக்கு இழப்பீடு குறித்த அறிவிப்பும் ஏற்புடையதல்ல.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிற்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்கி, விவசாயத்தொழிலையும், விவசாயிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.