கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை 110 நாடுகள் ஏற்றுள்ளன – மத்திய அரசு தகவல்…!!
கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 116 கோடியை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டோர் பிற நாடுகளுக்கு பயணிப்பதில் உள்ள தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்க 110 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக நம் நாட்டு மக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியா வழங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், குவைத், ஈரான், கத்தார் உள்பட 110 நாடுகள் இப்பட்டியலில் அடங்கும். பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளது.