சர்வாதிகாரமே தீர்வு – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்…!!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்வாதிகாரமே தீர்வு என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சோகம், அவமானம் மற்றும் முற்றிலும் நியாயமற்றது என பதிவிட்டுள்ளார்.
மேலும், தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டார்கள். பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம்தான்… இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
அவரது அடுத்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, லத்தி (குச்சி)தான் ஒரே தீர்வு, சர்வாதிகாரம்தான் ஒரே தீர்மானம். பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம் என கூறியுள்ளார்.