தெற்கு ஆந்திரா முழுவதும் கடும் பாதிப்பு- 1316 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது…!!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆந்திரா வழியாக கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் கனமழை பொழிந்தது.
சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழையால் தெற்கு ஆந்திரா முழுவதும் வெள்ளக்காடானது.
கல்யாணி அணை 2 மதகுகள் வழியாக மழைநீர் வெளியேற்றப்பட்டது. சித்தூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான வேளச்சேரி ஏரி முழு கொள்ளளவை எட்டி உடையும் அபாய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கல்யாணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீவா நதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் நீவா நதியை ஒட்டிய கிராமத்தில் கட்டப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள், ஆட்டோக்கள், பைக்குகள் கார்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
திருப்பதி மாநகரில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அங்குள்ள மக்கள் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றியும், பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.
கடப்பா மாவட்டம் சேயேரு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி ஏற்றிச்சென்ற 2 கிராமத்தை சேர்ந்த 25 போர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.
சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 17 கம்பெனி தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 மாவட்டங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 17 பேரின் உடல்கள் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 41 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் மழை வெள்ளம் காரணமாக 1316 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 6 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் 1590 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த சித்தூர், நெல்லூர் கடப்பா ஆனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்படும். ஆந்திராவில் மொத்தம் ஆயிரத்து 1,533 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. நெல்லூரில் 500 கிலோ மீட்டரும், கடப்பா 540 கிலோ மீட்டர், சித்தூரில் 217 கிலோமீட்டர், அனந்தபுரத்தில் 161 கிலோ மீட்டர் என சாலைகள் சேதமடைந்துள்ளன. வெள்ள பாதிப்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.950 கோடி உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.