கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.
கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.
அந்நிலையில் தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர் தாமும் துப்பரவு பணியில் ஈடுபடுவதாக துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
அதேவேளை இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் , அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”