மைத்திரியை சீண்டினால் விளைவுகள் மோசமாகும் !!
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மீதான, ஆளுந்தரப்பினரின் தொடர் சேறுபூசல்களை இனியும் பொறுத்துகொள்ள முடியாது“ எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, “மயில்போல் ஆடும் மஹிந்தானந்தவின் பேச்சை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விளைவுகள் மோசமாக இருக்கும்“ எனவும் கடுந்தொனியில் எச்சரித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (25) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஆட்சிக் காலத்தில் 3.5 பில்லியன் ரூபாயை செலவிட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இதில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 1.5 பில்லியன் செலவும் அடங்கும் எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல நல்ல அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்த வேலைத்திட்டங்களையும், அதற்கான செலவுகளையும் கூறிய தயாசிறி, 3.5 பில்லியன் ரூபாய்களை மைத்திரிபால சிறிசேன நாசமாக்கவில்லை.
நல்ல வேலைத்திட்டங்களுக்காகவே பயன்படுத்தினார் எனவும் கூறினார். மைத்திரி 200 வாகனங்களை பயன்படுத்தினார் என மஹிந்தானந்த கூறும்போது, அமைச்சர்
ரோஹித 350 வாகனங்களை மைத்திரி பயன்படுத்தினார் என்கிறார். இதில் எது உண்மை? எனவும் அவர் வினவினார்.
மஹிந்தானந்த அளுத்கமகே, மைத்திரி மீது ஒரு தடவை, இரு தடவை சேறுபூசினால் பரவாயில்லை நாம் பொறுத்துகொண்டு இருப்போம். எனினும் 14 பாராளுமன்ற
உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மீது தொடர்ந்து சேறுபூசுவதை எங்களால் பொறுத்துகொள்ள முடியாது என குறிப்பிட்டார். மஹிந்தானந்த அளுத்கமகே, மயிலை போல தேகை விரித்தாடுகிறார்.
ஆனால் மயிலின் பின்புறம் வெளியில் இருக்கிறது என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. மஹிந்தானந்த தொடர்ந்து சேறுபூசுங்கள். பல விடயங்கள் வெளியில் வரும். நாம் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்றவகையில் ஒவ்வொரு தடவையும் அரசாங்கத்தை பாதுகாத்து வருகிறோம் என்றார்.
எங்களுக்கு எதிராக சேறுபூசுவதைப் பொறுத்துகொள்வோம். ஆனால், கட்சித் தலைவராக
இருக்கும் மைத்திரிக்கு எதிராக சேறுபூசுவதை தொடர்ந்து பொறுத்துக் கொள்ள முடியாது.
மஹிந்தானந்தவின் பேச்சை குறைக்க ஆளுந்தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.