வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்படைந்த குடும்பங்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு: உதவி மாவட்ட செயலாளர்!!
வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருவதாக உதவி மாவட்ட செயலாளர் மகிந்தன் சபரிஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வவுனியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 63 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேரும் பாதிப்படைந்திருந்தனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இராசேந்திரங்குளம் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்த நிலையில் இழப்பீட்டு கொடுப்பனவாக 2 இலட்சத்து 50,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்ட கொடுப்பனவாக 25,000 ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக பகுதியளவில் சேதமடைந்த 7 வீடுகளுக்குமான இழப்பீட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் முதல் கட்ட இழப்பீடாக 10,000 ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளுக்கும் மதிப்பீடு செய்யப்பட்ட மிகுதி இழப்பீட்டுத் தொகையும் விரைவில் வழங்கப்படும்.
மேலும், மழையினால் பாதிப்படைந்த 63 குடும்பங்களுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரண உதவித் திட்டங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி மாவட்ட செயலாளர் மகிந்தன் சபரிஜா மேலும் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”