551 நாட்களில் முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு…!!
நாட்டில் கொரோனா புதிய பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைந்திருப்பது கடந்த 551 நாட்களில் முதல் முறை ஆகும். விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாடுமுழுவதும் 7,62,268 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இதுவும் பாதிப்பு இந்த அளவுக்கு குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,382 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 87 ஆயிரத்து 822 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 190 பேர் இறந்துள்ளனர். மொத்தபலி எண்ணிக்கை 4,68,980ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,962 பேர் அடங்குவர்.
தொற்றின் பிடியில் இருந்து மேலும் 10,116 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,00,543 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 546 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 78,80,545 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 123 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது.
இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 64.13 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று 10,12,523 மாதிரிகள் அடங்கும்.