சர்வதேச விமான சேவை தொடங்குவது மேலும் தாமதம் -மத்திய அரசு…!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிதையடுத்து கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது. 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தடை 2021 நவம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து இம்மாதம் 15ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க விமான போக்குவரத்துத்துறை திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்ட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக
பரவி வருவதால் திட்டமிட்டபடி இம்மாதம் 15ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் சர்வதேச விமான சேவை தொடங்கும் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.