மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெகுவாக குறைந்துள்ளது -மத்திய அரசு தகவல்…!!
இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும், அதன்மூலம் உயிரிழப்பு சம்பவங்கள் குறைந்துள்ளதா? என்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. விஜய் பால்சிங் தோமர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் பதில் அளித்துள்ளார்.
அதில், “கடந்த 2009ம் ஆண்டில் மாவோயிஸ்டுகளால் 2,258 வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால் 2020ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 665 ஆக குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 70 சதவீதம் அளவுக்கு வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன.
அதேபோல், மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புகள் 2010ம் ஆண்டில் 1005ஆக இருந்தது. 2020ம் ஆண்டில் பலி எண்ணிக்கை 183 ஆக குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 80 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கிறது.
2013ம் ஆண்டில் 10 மாநிலங்களில் 76 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்தது. தற்போது 9 மாநிலங்களில் 53 மாவட்டங்களில் மட்டுமே அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வன்முறையை பரப்பும் தீவிரவாதிகளின் நிலப் பகுதிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கு 2021ம் ஆண்டிலும் தொடர்கிறது.” என கூறப்பட்டுள்ளது.