பாகிஸ்தான் சம்பவம் :வெட்கமும் துக்கமும்!! (கட்டுரை)
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டமையினால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திலும் ஒரு எதி;hபாராத தர்மசங்கடமும், நெருக்கடி நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத நெருக்கடிகள் சற்று தளர்வடையத் தொடங்கும் தருணங்களில், எதோ ஒரு திசையில் இருந்து இவ்வாறான ஒரு இக்கட்டான நிலை தோற்றுவிக்கப்படுவது அண்மைக்காலங்களில் தொடர் நிகழ்வாகியிருக்கின்றது.
‘இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்ற செய்திக்கும், ‘இலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் பாகிஸ்தான் வீதியில் வைத்து ஒரு முஸ்லிம் கும்பலினால் சாரமாரியாக தாக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளார்’ என்ற செய்திக்கும் வித்தியாசம் இருக்கின்றது. ஆனால், பாகிஸ்தான் இதில் இரண்டாவது வகையைச் சார்ந்தது.
பிறநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் போது உயிரிழப்பதோ அல்லது கொல்லப்படுவதோ புதிய விடயமல்ல. புலம்பெயர்ந்து பணியாற்றுகின்றவர்கள் கூட இவ்விதமான ஈவிரக்கமற்ற எத்தனையோ குற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றார்கள். ஆனால், இவை எல்லாவற்றிலும் இருந்து, இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் வேறுபடுகின்றது.
அந்நாட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த பிரியந்த குமார என்ற இலங்கையர், அதன் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரால் வீதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு, பின்னர் தீயிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தென்னாசிவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவர் கொல்லப்பட்டார் என்பதை விடவும், அதனை ஒரு கும்பல் பகிரங்கமாக மேற்கொண்டமையும் அதனை கணிசமானோர் வேடிக்கை பார்த்தமையும் இன்னும் சிலர், செல்பி மற்றும் வீடியோக்களாக பதிவு செய்தமையுமே, எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியததாக ஆகியிருக்கின்றது.
ஆனால், பாகிஸ்தான் மக்களால் அவர் கொல்லப்படவில்லை. அவர்கள் இதற்கு பகிரங்க கண்டனத்தை தெரிவித்துள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆங்கிருந்த சிலர் இதனை தடுக்க முயன்றுள்ளனர். அதில் பிரியந்தவின் முஸ்லிம் நண்பரான மலிக் அத்னானை கௌரவிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளமையும் கவனிப்பிற்குரியது.
பிரியந்த குமார எவ்வாறு மரணிக்கச் செய்யப்பட்டார் என்பது வெட்ட வெளிச்சமான விடயமாகும். ஆனாலும், இதன் பின்னணியில் தெளிவின்மைகள் உள்ளன. இது குறித்து இரு கதைகள் சொல்லப்படுகின்றன.
பத்து வருடங்களாக பாகிஸ்தானில் பணியாற்றி வரும் பிரியந்தவின் நடவடிக்கையில் அண்மைக்காலமாக மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், இஸ்லாமிய மார்க்கத்தையும், திருக் குர்ஆனையும் நிந்திப்பவராக அவர் மாறியிருந்தார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த இஸ்லாமிய மதம்சார் வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒன்றை கிழித்ததை அடுத்தே, அவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒரு தரப்பினால் கூறப்படுகின்றது.
இதேவேளை, பிரியந்த மிகவும் நல்லவர் என்றும் அவர் கிழித்தது இஸ்லாமிய நற்சிந்தனையையோ வாசகத்தையோ அல்ல என்றும் இன்னுமொரு தரப்பினால் கூறப்படுகின்றது. அதாவது. அங்குள்ள தீவிரப் போக்குள்ள ஒரு கட்சியின் சுவரொட்டியையே அவர் கிழித்ததாகவும் அதிலேயே மத வாசகம் உள்ளடங்கியிருந்ததாகவும் வேறு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதில் எது உண்மை என்பது நூறுவீதம் ஊர்ஜிதம் இல்லை. இலங்கையில் நடக்கின்ற வன்முறைகளின் பின்புலத்தையே நம்மால் வருடக் கணக்கான துல்லியமாக அறிந்து கொள்ள முடியாதிருக்கின்ற சூழலில், பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தின் உண்மைத் தகவல்கள் நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.
இதனையெல்லாம் கடந்து, அங்கு என்ன நடந்திருக்கலாம் என்பதையும், இவ்;விவகாரம் எவ்வாறு கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அலசுவது, பல்லினச் சமூகங்களுடன் வாழும் நமக்கு அவசியமானதாகும்.
212 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட பாகிஸ்தானில் முஸ்லிம்கள் 96 சதவீதம் வாழ்கின்றார்கள். இந்துக்கள் 2 சதவீதமும் கிறிஸ்தவர்கள் 1 சதவீதமும் வாழ்கின்றார்கள். அதாவது இலங்கையில் வாழ்கின்ற சிங்கள மக்களின் வீதாசாரத்தை விட பாகிஸ்தானில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களின் வீதாசாரம் அதிகமாகும்.
மிக அதிக சனத்தொகையைக் கொண்ட முஸ்லிம் நாடுகளில் ஒன்றாக இது இருக்கின்றது. எனவே அந்த நாட்டு மக்கள் எந்தளவுக்கு மார்க்க விடயத்தில் தனிக்காட்டு ராசாக்கள் போல இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இது தவிர, பாகிஸ்தானில் ஆயிரத்தெட்டு மார்க்கம்சார் இயக்கங்களும் பிரிவுகளும் உள்ளன. அத்துடன் தீவிர போக்குள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் பெருவளர்ச்சி கண்டிருப்பதுடன், தீவிரவாத இயக்கங்களின் கூடாரமாகவும் பாகிஸ்தான் உலக நாடுகளால் நோக்கப்படுகின்றது.
இம்ரான் கான் பிரதமரான பிறகு ஒரு முற்போக்கு அரசியல் கலாசாரம் உருவாகியிருந்தாலும், பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆகவே இந்தப் பின்னணியில், பாகிஸ்தானில் வசிப்பது என்பது, அதுவும் மாற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்வது என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.
பல்லின நாடான இலங்கையில் இருந்து தொழிலுக்காகச் சென்றவர் என்ற அடிப்படையில், பிரியந்த இந்த விடயங்களை எல்லாம் அறியாதவராக இருந்திருக்க மாட்டார், அறியாது இருந்திருக்கவும் முடியாது. 10 வருடங்களில் அவர் பணிபுரிந்த சூழலும் அவரது சக பணியாளர்களும் அவருக்கு நிறைய யதார்த்தங்களைக் கற்றுக் கொடுத்திருப்பர்.
பாகிஸ்தான் மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களது சமய பழக்க வழக்கங்கள், உணர்வுத்தூண்டல் எப்பேர்ப்பட்டது என்பது பற்றியெல்லாம் பெருமளவுக்கு அறிந்து வைத்திருப்பார். அவ்வாறுதான் இலட்சக்கணக்கான இலங்கைப் பணியாளர்கள் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
இந்தக் கோணத்தில் நோக்கும் போது, பிரியந்த இஸ்லாமிய வாசகங்களை கிழித்ததாக கூறப்படுவது உண்மைதானா என்பதை இரண்டு முறை சிந்திக்க வேண்டிள்ளது. உண்மையில், அது ஒரு அரசியல் கட்சியின் சுவரொட்டியாக இருந்திருந்தால், முறையாக அதனை அகற்றும் அதிகாரம் முகாமையாளராக அவருக்கு இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால்;, அவர் தீவிரமாக இஸ்லாத்தை விமர்சிப்பவராக இருந்தார் என்று ஒரு விளக்கம் கூறப்படுகின்றது. இதனை அடிப்படையாக வைத்து கருத்து வெளியிடுகின்ற சமூக வலைத்தள பதிவாளர்கள், தொழில்புரியும் இடத்தில் அங்குள்ள மார்க்கத்தை மதிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால், இதுவெல்லாம் அனுமானங்களும் இப்போது வருகின்ற செய்திகளும்தான். இதில் மிகச் சரியான உண்மை எதுவென்பது நமக்குத் தெரியாது. கடைசி மட்டும் இது தெரியவரப் போவதும் இல்லை.
ஆனால் எது எவ்வாறாயினும், இந்தப் படுகொலையை எந்த நியாயங்களின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இந்த சம்பவம் மிகவும் மிலேச்சத்தனமானதும், காட்டுமிராண்டித்தனமானதும் ஆகும். அவர் ஒருவேளை மார்க்கத்தை நிந்தித்தால் கூட அவருக்கு அழகிய முறையில் அதற்கான விளக்கத்தை சொல்லிக் கொடுக்கச் சொல்லியே இஸ்லாம் அறிவுரை கூறியுள்ளது. ஒருவரை தாக்கிப் படுகொலை செய்யும் உரிமையை இஸ்லாம் உட்பட எந்த மார்க்கமும் யாருக்கும் வழங்கவும் இல்லை.
எனவே, இதனை இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். ஏன், பாகிஸ்தானில் கூட பல நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பும் கவலையும் வெளியிட்டுள்ளமை கவனிப்பிற்குரியது. எல்லா நாடுகளிலும் இவ்வாறான ஒரு குழப்பக்கார கும்பல் இருக்கின்றது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரின் நடவடிக்கைகள் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கின்றது என்றால், அவரை நாடு கடத்தியிருக்கலாம். பொலிஸில் ஒப்படைத்திருக்கலாம். அதைவிடுத்து, மிலேச்சத்தனமாக வீதியில் வைத்து கும்பலாக தாக்குதல் நடத்தி சாகடித்துள்ளமை மனிதகுல நாகரிகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளது.
அத்துடன் இஸ்லாமிய சமயம் பற்றிய ஒரு தவறான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று பிரச்சாரம் செய்து வரும் தரப்புக்களுக்கு, இது ‘வாய்க்கு அவலாக’ ஆகியிருக்கின்றது.
இந்தப் பின்னணியிலேயே, பாகிஸ்தான் பிரதமரும் ராஜபக்ச சகோதரர்களின் நெருங்கிய சகாவுமான இம்ரான் கான், இதனை ‘பாகிஸ்தானின் வெட்ககரமான நாள்’ எனக் கூறியுள்ளார். அங்கு 200 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த சம்பவத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது பிரியந்தவின் குடும்பம் என்பது போல, இதனையடுத்து அதிக மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளது இலங்கை முஸ்லிம் சமூகமாகும்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் ஏற்படும் நெருக்கடியை விட, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிங்கள – முஸ்லிம் உறவில் கூரிய நகங்களால் கீறல்கள் விழுந்து விடுமோ என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரியந்தவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்ற நிலையில், இந்த படுகொலையை காரணமாக வைத்து இனவாதிகள் ஏதேனும் வன்முறைகளை தூண்டிவிட்டு, நம்மைப் பழிவாங்குவார்களோ, நம்;மீது வெறுப்பை உமிழ்வார்களோ என்ற கவலையும் முஸ்லிம்களுக்கு தொற்றிக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு புத்திகெட்ட கும்பல் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற செயலால், இலங்கை முஸ்லிம்கள் என்ன எதிர்வினையை எதிர்கொள்வார்கள்? அதனை எவ்விதம் எதிர்கொள்வார்கள் என்பதே இன்றுள்ள கவலைதோய்ந்த கேள்வியாகும்.