;
Athirady Tamil News

காணிக்கான போராட்டமே இனப்பிரச்சினையின் அடிப்படை!!

0

1964 சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை – இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனபடுத்தி விட்டன. ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது. ஆனால், இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டு தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

அதேபோல், வடகிழக்கில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளில் வழக்கு, கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில், அரச குடியேற்ற திட்டங்களில், காணி பிரித்து வழங்கப்படும் போது, அந்த மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கும், அடுத்து அம்மாவட்டத்தை அடுத்த மாவட்ட நிரந்தர விதிவாளருக்கும், அதையடுத்து நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும், முன்னுரிமைகள் வழங்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை. இது இன்று மீறப்படுகிறது. திடீரென ஒரு அரசு, ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து, நாட்டில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளபட்ட முறைமைகளை தலைகீழாக மாற்றிப்போட முடியாது. ஆகவேதான் இனப்பிரச்சினை தீராமல் தொடர்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

“எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு, கொழும்பு குளோபல் விடுதியில் நடத்திய கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

காலத்துக்கு மிகவும் அவசியமான முற்போக்கான செயற்பாட்டை, இந்த காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி செய்கிறது. எமது பாராட்டுகள். நாம் முழுமையாக உங்களுடன் ஒத்துழைப்போம்.

மலையக மக்களுக்கு இரண்டு காரணங்களுக்காக காணி தேவை. ஒன்று, வீடு கட்டி வாழ காணி. அடுத்து, விளைநில வாழ்வாதார காணி. அதை இங்கே இந்த மக்கள் ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளர் கணேசலிங்கம் கணேஷ் மிக சரியாக சொன்னார். இந்த உரிமைகள் எமக்கு இன்று மறுக்கபடுகின்றன. அல்லது, பெரும்பான்மை மக்களுக்கு தோட்ட காணிகள் பிரித்து வழங்கப்படுவது போன்று எமது மக்களுக்கு வழங்கப்படாமல் பாராபட்சம் காட்டப்படுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது.

வடகிழக்கில் 1958ன் பண்டா-செல்வா, 1965ன் டட்லி-செல்வா உடன்படிக்கைகளில் வழக்கு கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமென விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டங்களில், அரச குடியேற்ற திட்டங்களில், காணி பிரித்து வழங்கப்படும் போது, அந்த மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கும், அடுத்து அம்மாவட்டத்தை அடுத்த மாவட்ட நிரந்தர விதிவாளருக்கும், அதையடுத்து நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும், முன்னுரிமைகள் வழங்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை. இதை இன்று மீறப்படுகிறது. அதன்மூலம் குடிபரம்பல் மாற்றப்படுகிறது. இதையும், நாம் அனுமதிக்க முடியாது.

அதேபோல், 1987ல், வந்த 13ம் திருத்தத்திலும் காணி உரிமை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. திடீரென ஒரு அரசு, ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து, நாட்டில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளபட்ட முறைமைகளை தலைகீழாக மாற்றிப்போட முடியாது.

இது எமக்கு முன்னுள்ள உணர்வுபூர்வமான பிரச்சினை. ஆகவே, இன்றைய அரசு தனது எதேச்சதிகார போக்கில் தமிழ் மக்களின் காணி உரிமைகளை மறுக்க முடியாது. நாம் எமது காணி நில உரிமைகளை பெற, பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம். இந்த அமைப்பு முழு நாட்டுக்கும் அவசியமான நியாயமான காணி கொள்கையை உருவாக்கும் நோக்கில் உழைக்க வேண்டும். நாம் உங்களுடன் முழுமையாக ஒத்துழைத்து செயற்பட தயாராக உள்ளோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.