;
Athirady Tamil News

சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார்!!

0

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும். இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும். ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.

ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது. இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம். சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.

என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள். அதாவது வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள். அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள். மக்களை அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறினார்கள். ஜெனிவாக்கு சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள். இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள். இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள். முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன. மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.