அமெரிக்காவில் எச்.1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்…!!
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக ஐ.டி. துறையை சேர்ந்தவர்கள் எச்.1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சி நிர்வாகத்தின் போது எச்.1பி விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசு எச்.1பி விதித்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில் எச்.1பி விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய மசோதா அமெரிக்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘எச்.1பி விசா திட்டத்தில் கடுமையான நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடன்
‘ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்’ திட்டத்தை பெரிய நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரிய ஐ.டி. நிறுவனங்கள் வரிச்சலுகையை பெறுவது மட்டுமின்றி குறைந்த சம்பளத்தில் அதிக அளவில் ஊழியர்களை பணியில் அமர்த்தி சலுகைகளையும் பெறுகின்றன. இதனால் இந்த திட்டத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
எச்.1பி விசா வழங்குவதற்கு ஆண்டு வருமான அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த வருமானத்தை நிர்ணயம் செய்ய ஒரு அமெரிக்கரின் அதிகப்படியான சம்பளத்தை கருத்தில் கொண்டு அளவீட்டை முடிவு செய்ய வேண்டும். தற்போது 3 வருடமாக இருக்கும் எச்.1பி விசா காலத்தை ஒரு வருடமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை குடியரசு கட்சியின் ஆய்வு அமைப்பு தலைவர் ஜிம் பேங்க்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் கூறும்போது, ‘அமெரிக்காவில் பெரிய நிறுவனங்கள் வரிச்சலுகை முதல் அதிக அளவில் ஆதாயம் பெற்றாலும் நாட்டுப்பற்று இல்லாமல் இருக்கின்றன.
முக்கியமான வேலை வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு அளிக்காமல் வெளி நாட்டினருக்கு அளிக்கிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார். எச்.1பி விசா மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் மசோதா முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.