கொரோனா பாதித்த நடிகை கரீனா கபூருடன் விருந்தில் கலந்து கொண்டது யார்-யார்?…!
மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். குறிப்பாக மதுபான விடுதிகள், பார்களில் கொரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரபல இந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே கரீனா கபூர் கடந்த ஒரு வாரத்தில் பல விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக மும்பையில் உள்ள கிரான்ட் ஹயாத் ஓட்டல், இயக்குனர் கரன் ஜோகர் மற்றும் ரியா கபூர் ஆகியோரின் வீடுகளில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு உள்ளார். எனவே கரீனா கபூருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை மாநகராட்சி தயார் செய்து, அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தி வருகிறது.
இது குறித்து மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறுகையில், ‘‘ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு நடிகையுடன் தொடர்பில் இருந்தவர்களை உத்தரவிட்டு உள்ளோம். கரீனா கபூரின் கட்டிடமும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 15 பேருக்கு பரிசோதனை செய்து உள்ளோம். மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.
நடிகை கரீனா கபூர் வசித்து வரும் கட்டிடத்திற்கு மாநகராட்சியினர் சீல் வைத்தனர்.
இதற்கிடையே கொரோனா பரவல் முடியாத நிலையில், அலட்சியமாக இருப்பது சரியல்ல என மும்பை மேயர் கிஷோரி பெட்னேக்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கரீனாவுக்கு வீட்டில் 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா பரவல் முடியாத நிலையில் அலட்சியமாக நடந்து கொள்வது சரியானது அல்ல. கரீனா விருந்தில் கலந்து கொண்ட கிரான்ட் ஹயாத் ஓட்டலை தொடர்பு கொண்டு உள்ளோம். விருந்தில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து வருகிறோம். தொற்று பாதித்த 2 நடிகைகளின் டாக்டர்களையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம். இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் வயதுக்கு சந்தோஷமாக இருக்க நினைப்பார்கள்.
ஆனால் பொதுமக்கள் அதிக முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரபலமாக இருப்பவர்கள் ஏன் கொரோனாவுக்கு பயப்படுவதில்லை?. அரசு வழங்கி உள்ள தளர்வுகளை சிலர் மற்றும் ஓட்டல்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டது போல தெரிகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் வேறு உள்ளது. எனவே தற்போது உள்ள சூழலில், கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களை கேட்டு கொள்கிறோம்” என கூறினார்.