மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-
10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையில் நடைபெறுகிறது.
இதில் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும். 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 14-ந்தேதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறும்.
இதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நிறைவு பெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும்.
10-ம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ந் தேதி வரை நடைபெறும்.
தேர்வு கால கட்டத்தில் கொரோனா விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்…அமெரிக்காவில் இதுவரை 5.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்