விதிமுறைகளை மீறி ஓட்டல், வணிக வளாகங்களில் சுற்றி திரிந்த ஒமைக்ரான் நோயாளி…!!
உலகை மிரட்டி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் காங்கோ நாட்டில் இருந்து எர்ணாகுளம் வந்த வாலிபர் ஒருவரும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைபடுத்த மாநில சுகாதார துறை முயற்சி மேற்கொண்டது.
இதில் காங்கோவில் இருந்து வந்த வாலிபர், எர்ணாகுளம் வந்து சேர்ந்ததும், அங்குள்ள பல ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் சுற்றி திரிந்துள்ளார்.
இது தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இதை அறிந்து கேரள சுகாதார துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி காங்கோ நாட்டில் இருந்து எர்ணாகுளம் வந்த வாலிபருக்கும் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என விமான நிலையத்திலேயே அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் அவர் கட்டுப்பாடுகளை மீறி பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். அவரது தொடர்பு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்க சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்டிப்பாக 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளை மீறாமல் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.