இந்தியாவில் 101 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – மத்திய அரசு தகவல்…!!
நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலர் மேலாண் இயக்குநர் டாக்டர் பார்கவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
அப்போது பேசிய லாவ் அகவர்வால் தெரிவித்ததாவது:
11 மாநிலங்களில் சேர்த்து 101 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. உலக அளவில் 91 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால் டெல்டாவை விட ஒமைக்ரான் சமூக பரவல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி கொரோனா தடுப்பூசி போடுவதில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இவ்வாறு லாவ் அகர்வலால் குறிப்பிட்டார்.
கொரோனா பரிசோதனையின்போது ஒவ்வொரு மாதிரியின் மரபணுவை வரிசைமுறை படுத்துவது சாத்தியமில்லை என்று நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்தார்.